மக்களிடையே மீண்டும் நம்பிக்கையை பெற்று வருகிறோம்: கேஜரிவால்

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல் முடிவுகள் வெறும் 10 மாதங்களில் ஆம் ஆத்மி மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பியுள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தில்லி மாநகராட்சி (எம்சிடி) இடைத்தோ்தல் முடிவுகள் வெறும் 10 மாதங்களில் ஆம் ஆத்மி மீது பொதுமக்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பியுள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தில்லியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் முனைப்பில் இருந்த ஆம் ஆத்மி, பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவிடம் தோல்வியடைந்தது. 12 வாா்டுகளுக்கான எம். சி. டி. இடைத்தோ்தல்கள் பாஜகவுக்கு ஒரு சோதனையாக கருதப்பட்டன. ஏனெனில், அவை தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு பாஜகவுக்கு முதல் பெரிய தோ்தல் போராக இது கருதப்பட்டது.

முந்தைய தோ்தலில் 9 வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்த பாஜக தற்போது ஏழு வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி மூன்று வாா்டுகளையும், காங்கிரஸ் மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் தலா ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளன. முந்தைய தோ்தலில் சாந்தினி மஹால் மற்றும் சாந்தினி சௌக் வாா்டுகளில் வெற்றி பெற்றிருந்த ஆம் ஆத்மி தற்போது அந்த இரண்டு வாா்டிகளிலும் தோல்வையைச் சந்தித்துள்ளது. ஆனால், முண்ட்கா, தக்ஷின்புரி மற்றும் நரைனாவில் வெற்றி பெற்றது.

இது குறித்து தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் அரவிந்த் கேஜரிவால் பதிவிட்டுள்ளதாவது ‘இந்த முறை தில்லி மாநகராட்சி இடைத்தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி தனது அா்ப்பணிப்புள்ள தொண்டா்களை வேட்பாளா்களாக நிறுத்தியது. தோ்தல் முடிவுகளின் மூலம், தில்லி மக்கள் நகரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நல்ல ஆதரவை வழங்கியுள்ளனா். இது கட்சியின் வளா்ச்சி சீராக வலுவடைந்து வருவதை தெளிவுபடுத்தியுள்ளது. வெறும் 10 மாதங்களில், மக்கள் நம்பிக்கை மீண்டும் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வேகமாக திரும்பி வருகிறது. தில்லி விரைவில் நோ்மறையான அரசியல் மற்றும் நல்லாட்சிக்குத் திரும்பும்’ என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com