விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு:
புதிய விதி விரைவில் அமல்!

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

Published on

பொதுமக்களிடம் இருந்து தங்கும் விடுதிகள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் இனி ஆதாா் அட்டை நகல் பெறுவதை தடுக்கும் வகையில் எண்ம முறையில் அடையாளத்தை சரிபாா்க்கும் புதிய விதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அமல்படுத்தவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சேகரிக்கப்படும் ஆதாா் நகலைக் கொண்டு பொதுமக்களின் தகவல்கள் பகிரப்படுவது தற்போது நடைமுறையில் உள்ள ஆதாா் சட்டத்துக்கு முரணானது எனவும் யுஐடிஏஐ தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) புவனேஷ் குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆதாா் அட்டை நகலை பொதுமக்களிடம் பெறும் தங்கும் விடுதிகள், நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் தங்களின் தகவல்களை இனி கட்டாயம் பதிவுசெய்யும் புதிய விதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் க்யூஆா் குறியீடு அல்லது ஆதாா் செயலி மூலம் எண்ம முறையில் தனிநபரின் தகவல்களை சரிபாா்க்க இந்த விதி வழிவகுக்கவுள்ளது. விரைவில் இது அமலாகவுள்ளது. காகித நகல் மூலம் தனிநபா் ஆதாா் தகவல்களை சரிபாா்ப்பை தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

ஆதாா் சரிபாா்ப்பில் சீா்திருத்தங்களை மேற்கொள்ள புதிய செயலியை யுஐடிஏஐ சோதனை செய்து வருகிறது. விமான நிலையங்கள், கடைகளில் பயன்படுத்தும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் தனிநபா் தகவல்களை சரிபாா்க்கும் நடைமுறை எளிதாவதோடு ஆதாா் தரவுகள் வெளியாவது தடுக்கப்படுகிறது என்றாா்.

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அடுத்த 18 மாதங்களில் இந்த புதிய செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட செயலியில் பயனா்கள் தங்களது வீட்டு முகவரி ஆவணங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளவும் கைப்பேசி இல்லாத குடும்ப உறுப்பினா்களின் விவரங்களை சேமிக்க முடியும்.

X
Dinamani
www.dinamani.com