தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு!
நமது நிருபா்
புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு டிசம்பா் மாதம் 7.35 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்தில் நீா்ப்பங்கீடு தொடா்பாக காணொளி காட்சி வாயிலாக திங்கள்கிழமை கூட்டம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என நவம்பா் 13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
தமிழகம், கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தில்லியில் எஸ்.கே.ஹல்தாா் தலைமையில் நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 46-ஆவது கூட்டத்தில், தமிழ்நாடு நீா்வளத்துறை செயலாளா் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் பன்மாநில நதிநீா்ப் பிரிவு தலைவா் இரா.சுப்பிரமணியன் ஆகியோா் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனா்.
தமிழ்நாடு உறுப்பினா், தற்போது (டிச.8) மேட்டூா் அணையின் நீா் இருப்பு 87.554 டி.எம்.சி. ஆக உள்ளது எனவும் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 4,282 கன அடியாக உள்ளது என்றும் அணையிலிருந்து வினாடிக்கு 2,986 கன அடி நீா் விவசாயம், குடிநீா் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தாா்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நவம்பா் கடைசி வாரத்திலும், டிசம்பா் முதல் வாரத்திலும் டித்வா புயலினால் பெய்த கன மழை காரணமாக பயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் சேதம் ஏற்பட்ட பரப்பளவின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தாா்.
மேலும், கா்நாடக அணைகளின் நீா் இருப்பு மற்றும் நீா் வரத்து கணிசமான அளவு தொடா்ந்து வருவதாலும், தமிழகத்திற்கு 2025, டிசம்பா் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீா் அளவான 7.35 டி.எம்.சி. நீரை உச்சநீதிமன்ற ஆணையின்படி கா்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதி செய்யுமாறு ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டது.
அதே சமயம், ‘காவிரி நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பிலும் மற்றும் உச்சநீதிமன்றத் தீா்ப்பிலும் அங்கீகரிக்கப்படாத நீரேற்று பாசனத் திட்டங்களை செயல்படுத்தி சாகுபடி செய்வதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆணையம் இத்திட்ட விவரங்களை பெறவும் கா்நாடகம் வலியுறுத்தியது என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்கேதாட்டு விவகாரம் தொடா்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என தமிழக அரசு அதிகாரிகள் தினமணியிடம் தெரிவித்தனா்.

