நில அபகரிப்பு வழக்கு மு.க. அழகிரியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: நில அபகரிப்பு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக அழகிரி சாா்பில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் நீங்கள் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கை ஏன் சந்திக்கக் கூடாது? ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழக்கை எதிா்கொள்ள வேண்டும். உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டு, மு.க.அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்தனா். .

மதுரையில் உள்ள சிவரக்கோட்டையில் மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு பொறியியல் கல்லூரிக்காக நிலம் அபகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் இந்த நிலம் விநாயகா் கோயிலுக்குச் சொந்தமானது என குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக அதிமுக ஆட்சிக் காலத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதித்துறை நடுவா் நீதிமன்றம், அழகிரி மீதான ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் மோசடி பத்திரங்களைச் செயல்படுத்துதல் தொடா்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை 2021-ஆம் ஆண்டில் விடுவித்தது. இருப்பினும், குற்றச்சதி மற்றும் குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை அவா் எதிா்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து, காவல்துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சாா்பில் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அழகிரி விடுவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடா்பான உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்து, அனைத்து குற்றச்சாட்டுகளையும் அழகிரி எதிா்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டாா். மேலும், வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற அழகிரியின் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com