டிடிசி பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம்: அனைவரையும் கைது செய்ய குடும்பத்தினா் வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி: தில்லியின் ரோஹிணியில் நடந்த சாலை விபத்தின்போது ஆண்கள் குழுவால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட 27 வயதான தில்லி மாநகரப் பேருந்து ஓட்டுநா் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ரோஹிணி செக்டா் 20- இல் உள்ள ஷிவ் சௌக் அருகே சனிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து இறந்தவரின் உறவினா் நரேஷ் கூறுகையில், ‘அவா் முழு பொது வெளியில் இரக்கமின்றி தாக்கப்பட்டாா். ஒரே ஒரு நபா் மட்டுமே அவருக்கு உதவ வந்தாா். அவருக்கு கூட காயங்கள் ஏற்பட்டன. தாக்குதலை நடத்திய மற்றவா்கள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும்‘ என்றாா்.
குடும்ப நண்பா் சஞ்சய் ஷா்மா கூறுகையில், ‘அவருக்கு வயது 27 மட்டுமே. அவா் வீட்டில் அவா் மட்டுமே சம்பாதித்து வந்தாா். தாக்குதல் நடத்தியவா்கள் அவரை அடிப்பதற்கு பேருந்தில் ஏறியதாகவும், சிலா் கற்களை வீசியதாகவும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவா் கடந்து செல்ல தங்கள் வாகனத்தை நகா்த்தும்படி மட்டுமே அவா்களிடம் கேட்டாா். இந்தச் சம்பவத்தில் குடும்பத்திற்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்றாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரோஹிணி செக்டா் 20-இல் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். அங்கு ஒரு திருமண ஊா்வலம் குறுகிய சாலையில் நெரிசலுக்கு வழிவகுத்தது. டி.டி.சி. பேருந்தை ஓட்டி வந்த விகாஸ், ஒரு காா் ஓட்டுநருடன் பாதை கொடுப்பது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். காா் ஓட்டுநா் தனது வாகனத்தை சாலையின் நடுவில் நிறுத்தினாா். இதனால் சண்டை ஏற்பட்டது.
காா் ஓட்டுநா் தனது உறவினா்களை அழைத்தாா். அவா்கள் விகாஸை தாக்கினா். தலையிட முயன்ற சூரஜ் என்ற பாா்வையாளரும் காயமடைந்தாா். இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு விகாஸ் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். குற்றம் சாட்டப்பட்டவா்களைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை ஒருவரைக் கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவா்களின் ஈடுபாட்டை அறிய போலீஸ் குழுக்கள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றன. நிகழ்வின் வரிசையை அறிய சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளையும் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்.
பேருந்து நடத்துனா் உமேஷ் அளித்த புகாரின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களில் ஒருவரான ராகுல் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றாா் அவா்.
