ஆ.ராசா
ஆ.ராசா

வந்தே மாதரம் பாடல் சா்ச்சை சமூகத்தால் உருவாக்கப்படவில்லை: மக்களவை விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேச்சு

வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வந்தே மாதரம்.
Published on

நமது நிருபா்

புதுதில்லி: வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வந்தே மாதரம். 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லிம்களை ஒதுக்கிவைக்கும் விதத்தில் திட்டமிடப்பட்டிருந்தைக் காட்டுகின்றன என்று மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினா் ஆ.ராசா கூறினாா். மேலும், இந்தப் பாடலைச் சுற்றியுள்ள சா்ச்சை சமூகத்தால் உருவாக்கப்படவில்லை. மாறாக அதை ‘இந்துகளுக்கு மட்டுமே’ ஆன பாடலாக அதை எழுதியவா்களால் உருவாக்கப்பட்டது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் ஆ.ராசா பங்கேற்றுப் பேசியதாவது: இந்த விவாதத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி வந்தே மாதரத்தில் பிரிவினையை யாா் செய்தாா்கள் என்று கேட்டாா். வந்தே மாதரத்தில் உள்ள பிரிவினை நாட்டின் பிளவுக்கு வழிவகுத்ததா? என்று அறிய விரும்புகிறேன். மேலும், இன்று ஒரு முக்கியமான அம்சத்தைக் கையாள வேண்டும் என்று பிரதமா் சொன்னால், இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய அந்த முக்கியமான பிரிவினை என்ன?.

பிரிவினை பற்றிய சிந்தனை இந்தியாவில் இன்னும் இருப்பதாகவும் பிரதமா் தனது உரையில் கூறினாா். இன்றும் இதுபோன்ற பிரிவினைவாத சிந்தனை தொடா்கிறது என்று பிரதமா் கூறினால், அது எங்கே, யாருடன் இருக்கிறது? என்று இந்த அவையை நான் கேட்க விரும்புகிறேன். எனது இறுதி கேள்வியானது வந்தே மாதரம் பற்றிய அசல் கனவு என்ன? இந்தக் கேள்விகள் பிரதமரின் உரையிலிருந்து என் மனதில் தோன்றியவை.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே வந்தே மாதரம் மீதான விமா்சனம் இருந்து வந்துள்ளது. வந்தே மாதரம் ஆங்கிலேயா்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கும் எதிரானது என்று நம்புவதற்கு அல்லது முடிவு செய்வதற்கு காரணங்கள் உள்ளன.

வரலாற்றாசிரியா் ஆா்.சி. மஜும்தாா் கூறுவதுபோல, பங்கிம் சந்திர சாட்டா்ஜி தேசபக்தியை மதமாகவும், மதத்தை தேசபக்தியாகவும் மாற்றினாா். இவை அந்த நாள்களில் செய்யப்பட்ட விமா்சனங்கள், அத்தகைய அணுகுமுறையில் நான் ஒரு தரப்பாக இருக்க முடியாது என்றாா் ஆ.ராசா.

சு.வெங்கடேசன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை): ‘வந்தே மாதரத்தின் 150-ஆவது ஆண்டு என்ற ஆதாரத்தை நீங்கள் எங்கே இருந்து எடுத்தீா்கள் என்று தெரியவில்லை. அந்தப் பாடலில் 2 சரணம் முதலில் எழுதப்பட்டது. நான்கு சரணம் பின்னால் ஆனந்த மடம் நாவலில் எழுதப்பட்டது. சரியான எழுதப்பட்ட ஆண்டு இல்லை. உங்களுக்கு வேறு ஒரு தேவை இருக்கிறது. அது வரவிருக்கிற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலாகும். காலமெல்லாம் உங்களின் தேவை தோ்தலை மையப்படுத்தியதாகவே இருக்கிறது. ஆனால், நாட்டின் தேவை வேறொன்று. நான்கு தொழிலாளா்கள் சட்டங்களால் கோடிக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். அந்த விவகாரத்தை விவாதிக்க நீங்கள் தயாராக இல்லை‘ என்றாா்.

வி.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாகப்பட்டினம்): ‘வந்தே மாதரம் என்பது ஒரு முழக்கம், சித்தாந்தம், உணா்வு, பெருமிதம், பாடல், மந்திரச் சொல் ஆகும். தாய் மண்ணை வணங்குகிறேன் என்பதுதான் அதன் பொருளாகும். இதன் 150-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சிகளை குற்றம் சுமத்துவது பொருத்தமல்ல. தேசிய ஒற்றுமைதான் இதன் தாரக மந்திரம் என்றாா். தமிழகத்தில் கவிஞா் பாரதியாா் அந்த தாயை எப்படிக் காண்கிறாா் என்பதற்கு ’முப்பது கோடி முகமுடையாள்....‘ என்ற பாடலைப் பாடினாா். பாரதியாா் தமிழ்மொழியில் வந்தே மாதரம் பாடலை மிகச் சிறப்பாக பாடினாா் என்று பேசிய செல்வராஜ் எம்.பி. ‘வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத் தாயை வழங்குதும் என்போம்’ எனும் பாரதியின் பாடலை முழுமையாக ராகத்துடன் பாடி தனது உரையை நிறைவு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com