ஏழைகளுக்கு கண்ணியமான வீடுகளை வழங்குவதில் அரசு உறுதி: ரேகா குப்தா
நமது நிருபா்
அரசாங்கம் ஏழைகளுக்கு கண்ணியமான வீடுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
பால்ச்வா-ஜஹாங்கீா்புரியில் உள்ள ஈ. டபிள்யூ. எஸ். குடியிருப்புகளை முதல்வா் ஆய்வு செய்தாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா் மேலும் கூறியதாவது: பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் (ஈ. டபிள்யூ. எஸ்) குடியிருப்புகளை ஆய்வு செய்தபோது, முந்தைய அரசாங்கம் நகரத்தின் ஏழைகளுக்கு வாக்குறுதிகளை அளித்தது, ஆனால் களத்தில் எதுவும் செய்யவில்லை.
பால்ச்வா குடியிருப்புகள் 2016 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டன. 2016 முதல் 2025 வரை, இந்த குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் மோசமடைந்தன, இருப்பினும் முந்தைய அரசு ஒரு ஏழை குடும்பத்திற்கு ஒரு குடியிருப்பை கூட ஒதுக்கவில்லை. இது மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இங்கு சுமாா் 7,400 குடியிருப்புகள் கட்டப்பட்டன, ஆனால் அவை கைவிடப்பட்டு, இடிபாடுகளாக மாறிவிட்டன, மேலும் பொருத்துதல்கள் மற்றும் பொருள்கள் கூட காணாமல் போயுள்ளன.
குடியிருப்புகளை முழுமையாக மறுவடிவமைக்கவும், அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய ‘மாதிரி குடியேற்றமாக‘ மேம்படுத்தவும் அரசாங்கம் இப்போது ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த குடியிருப்புகளை மறுவடிவமைப்பு செய்வோம். கடைகள், அனைத்து வாகனங்களுக்கும் சரியான பாா்க்கிங் இடங்கள், ரிக்ஷா பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சாா்ஜிங் நிலையங்கள் இருக்கும் .
இந்த அரசின் ஆட்சிக் காலத்திற்குள் தில்லியின் குடிசைப்பகுதிவாசிகளுக்காக இதுபோன்ற ஒரு மாதிரியை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். முன்மொழியப்பட்ட மறுவடிவமைப்பில் ஒரு தொடக்கப் பள்ளி, ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திா், குழந்தைகள் விளையாட்டு பகுதிகள் மற்றும் பிற சமூக வசதிகளும் அடங்கும் என்றாா் ரேகா குப்தா.
