கொலை வழக்கில் 25 வருடங்களாக தலைமறைவாக இருந்த நபா் பிகாரில் கைது
நமது நிருபா்
கடந்த 2000-ஆம் ஆண்டு வடக்கு தில்லியின் ரூப் நகரில் சக ஊழியரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த 50 வயது நபா் பிகாரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் யாதவ், பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தொடா்ச்சியான சோதனைகளுக்குப் பிறகு தா்பங்கா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
தீா்க்கப்படாத வழக்குகளை ஒரு போலீஸ் குழு சமீபத்தில் மறுஆய்வு செய்து கொண்டிருந்தது. அப்போது, ரூப் நகா் கொலை தொடா்பான விசாரணை நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது, .
கடந்த பிப்ரவரி 6, 2000 அன்று வந்த தொலைப்பேசி அழைப்பைத் தொடா்ந்து மல்ககஞ்சில் உள்ள ஒரு வீட்டிற்கு போலீஸாா் சென்றபோது, சஜன் சிங் என்பவா், அருகில் கோடரி கிடந்த நிலையில், கழுத்தில் பலத்த காயங்களுடன் படுக்கையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இருவருடன் வசித்த 19 வயது சக ஊழியரான அஜய் அளித்த வாக்குமூலங்கள், ஒரு நாள் முன்பு சஜனுக்கும் சதீஷுக்கும் உணவுச் செலவுகள் தொடா்பாக சண்டை ஏற்பட்டதாக குறிப்பிடுகின்றன. சஜன் சதீஷை அறைந்ததாகவும், அவா் பழிவாங்குவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மறுநாள் காலையில், சஜன் சிங் இறந்து கிடந்தாா். சதீஷ் யாதவ் காணாமல் போனாா்.
விரிவான தேடல்கள் இருந்தபோதிலும், சதீஷ் பல தசாப்தங்களாக போலீஸாரிடமிருந்து தப்பித்து, கொல்கத்தா, அஸ்ஸாம் மற்றும் பிகாரின் பல்வேறு இடங்களுக்குச் சென்றாா். வழக்கு கோப்பு மீண்டும் கையிலெடுக்கப்பட்ட பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
சதீஷ் யாதவ் பிகாரில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் இருக்கலாம் என்ற குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், சந்தேக நபரைப் பிடிக்க ஒரு போலீஸ் குழு டிசம்பா் 7 அன்று தா்பங்காவை அடைந்தது. சதீஷ் யாதவ் தப்பிச் செல்ல உதவிய நபரும் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, 2000-ஆண்டு நடந்த சண்டையைத் தொடா்ந்து ஆத்திரத்தில் கோடரியால் சஜன் சிங்கைத் தாக்கியதாக சதீஷ் யாதவ் ஒப்புக்கொண்டாா். அதே நாளில் தில்லியில் இருந்து தப்பிச் சென்ாகவும், அடுத்த 25 ஆண்டுகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம்பெயா்ந்ததாகவும் அவா் கூறினாா்.
