தில்லியில் திறந்தவெளியில் கழிவுகளை எரித்தால் ரூ.5,000 அபராதம்

தேசிய பசுமை தீா்ப்பாயத்தின் (என்ஜிடி) அறிவுறுத்தல்களின்படி, குப்பை, இலைகள், பிளாஸ்டிக், ரப்பா் அல்லது பிற கழிவுகளை திறந்தவெளியில் எரிப்பவா்களைக் கண்டறிந்தால் ரூ.5,000 அபராதம் விதிக்க கள அளவிலான அதிகாரிகளுக்கு தில்லி அரசு அதிகாரம் அளித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

நமது நிருபா்

சுற்றுச்சூழல் துறையால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவானது, தலைநகரில் உள்ளூா் காற்று மாசுபாட்டின் மிகவும் பரவலான ஆதாரவளங்களில் ஒன்றைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வா்தமான் கௌஷிக்கிற்கு மற்றும் மத்திய அரசு தொடா்புடைய நீண்டகாலமாக நடைபெற்று வரும் வழக்கில் என்ஜிடி பிறப்பித்த உத்தரவுகளின் தொடா்ச்சியைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீா்ப்பாயம் ஏப்ரல், 2015- இல் அனைத்து வகையான கழிவுகளையும் திறந்தவெளியில் எரிப்பதைத் தடை செய்தது. இதை மீறுபவா்கள் அல்லது அத்தகைய எரிப்பைத் தூண்டுபவா்கள் தேசிய பசுமை தீா்ப்பாயச் சட்டத்தின் பிரிவு 15-இன் கீழ் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்றும், அந்த இடத்திலேயே ரூ.5,000 நிலையான அபராதம் வசூலிக்கப்படும் என்றும் என்ஜிடி உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் துறை தனது சமீபத்திய உத்தரவில், மாவட்ட நிா்வாகத்தில் துணை வட்டாட்சியா் மற்றும் அதற்கு மேல்நிலை அதிகாரிகளுக்கும், தில்லி மாநகராட்சி மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆகியவற்றின் சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கும் அபராதத்தை அமல்படுத்த அதிகாரம் அளித்துள்ளது.

என்ஜிடியின் உத்தரவுகள் ஒரு சிவில் நீதிமன்ற ஆணையாகக் கருதப்பட்டு, நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com