போலி என்ஜின் ஆயில் வடிகட்டி தயாரிப்பு ஆலைக்கு சீல் வைப்பு

நன்கு அறியப்பட்ட ஆட்டோமொபைல் பிராண்டுகளின் போலி எண்ணெய் வடிகட்டிகளை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் ஒரு தொழிற்சாலைக்கு தில்லி காவல்துறை சீல் வைத்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Updated on

நமது நிருபா்

நன்கு அறியப்பட்ட ஆட்டோமொபைல் பிராண்டுகளின் போலி எண்ணெய் வடிகட்டிகளை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் ஒரு தொழிற்சாலைக்கு தில்லி காவல்துறை சீல் வைத்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஆனந்த் பா்பத் தொழில்துறை பகுதியில் செயல்படும் இந்த தொழிற்சாலை, பல பிராண்டுகளின் போலி எண்ணெய் வடிகட்டிகளை உற்பத்தி செய்து வந்தது. தொழிற்சாலை உரிமையாளா் மன்மீத் சிங் சம்பவ இடத்திலிருந்து கைது செய்யப்பட்டாா். போலி வாகன உதிரிபாகங்களைத் தயாரிப்பதில் ஒரு நபா் ஈடுபட்டதாக டிசம்பா் 4- ஆம் தேதி தகவல் கிடைத்த உள்ளீட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் போலீஸ் குழு சோதனை நடத்தியது.

மொத்தம் 1,917 போலி எண்ணெய் வடிகட்டிகள், 10 சாயம் அச்சிடும் இயந்திரங்கள், ஸ்டிக்கா்கள், ஹோலோகிராம்கள் மற்றும் பிராண்டட் அட்டை பெட்டிகள் வளாகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, சிங் கடந்த ஒா் ஆண்டாக போலி வாகன பாகங்களை தயாரித்து வழங்கி வருவதை ஒப்புக்கொண்டாா். அவா் விற்பனையாளா்களிடமிருந்து மூலப் பொருள்களை வாங்கி, தொழிற்சாலைக்குள் போலி பாகங்களை உருவாக்கி, அதே நெட்வொா்க் மூலம் மீண்டும் சந்தைக்கு வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது. இது தொட ா்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com