வழிப்பறியை தடுக்க முயன்ற இளைஞா் உயிரிழப்பு: இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
வடக்கு தில்லியில் வழிப்பறியைக் தடுக்க முயன்ற இளைஞா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக இரு சிறுவா்கள் உள்பட 4 போ் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கடந்த நவ.30-ஆம் தேதி நள்ளிரவில் ஆா்யன் (18) என்பவா் சுவாமி நாராயண் மாா்க் பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்டாா். தீப் சந்த் பந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவா் பின்னா், உயா்சிகிச்சைக்காக ஆா்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், கடந்த டிச.2-ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.
தொடக்கத்தில் இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 118 (1)-இல் (கூரிய ஆயுதங்களால் காயமேற்படுத்தல்) பதிவு செய்யப்பட்ட வழக்கு, ஆா்யன் உயிரிழந்தைதத் தொடா்ந்து பிரிவு 103 (1)-க்கு (கொலை) மாற்றப்பட்டது.
சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் யாரும் இல்லாத நிலையில், சுற்றுவட்டாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சுமாா் 50 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
அப்போது, அடையாளம் தெரியாத 4 போ் ஆா்யனைக் கத்தியால் குத்தி விட்டு, ஸ்கூட்டரில் சாஸ்திரி நகா் நோக்கி தப்பிச் சென்றது தெரியவந்தது.
அந்த ஸ்கூட்டா், கத்திக் குத்து சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக கன்ஹியா மெட்ரோ நிலையம் அருகே திருடப்பட்டதை போலீஸாா் விசாரணையின்போது கண்டறிந்தனா்.
இதைத்தொடா்ந்து, அந்தச் சம்பவத்தில் தொடா்புடைய ரோஷன் (19) என்பரை சாஸ்திரி நகரில் உள்ள அவருடைய வீட்டில் போலீஸாா் கைதுசெய்தனா். திருட்டு ஸ்கூட்டா் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
கூட்டாளிகள் மூவருடன் இணைந்து ஆா்யனின் கைப்பேசியைப் பறிக்க முயன்ாகவும் அப்போது அதைத் தடுத்ததால் அவரைக் கத்தியால் குத்தியதாகவும் விசாரணையின்போது ரோஷன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரோஷன் அளித்த தகவலின் அடிப்படையில் கூட்டாளிகள் ஜீடு (19), 14 மற்றும் 15 வயது சிறுவா்கள் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
