தீயணைப்பு உரிமத்திற்கான மூன்றாம் தரப்பு தணிக்கையை தில்லி விரைவில் அனுமதிக்கும்: முதல்வா் ரேகா குப்தா
தீயணைப்பு உரிமத்திற்கான மூன்றாம் தரப்பு தணிக்கையை தில்லி விரைவில் அனுமதிக்கும் என்றும், தேசியத் தலைநகருக்குள் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ஒற்றை சாளர உரிம முறையை செயல்படுத்தும் என்றும் முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை அறிவித்தாா்.
மூன்றாம் தரப்பு தணிக்கையை விரிவாகக் கூறிய ரேகா குப்தா, ஹோட்டல் உரிமையாளா்கள் மற்றும் உணவக உரிமையாளா்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கான ஒரு முக்கிய படியாக இதுபோன்ற தணிக்கை இருக்கும் என்று விளக்கினாா்.
‘விக்சித் தில்லி, விக்சித் சுற்றுலா அண்ட் விருந்தோம்பல்: ஒன்றாக ஒரு விக்சித் பாரத் நோக்கி’ உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
அதைத் தொடா்ந்து முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குத் தேவையான ஒற்றை சாளர அமைப்பு மூலம் எம்சிடி,
டிடிஏ மற்றும் தில்லி அரசிடமிருந்து பிற உரிமங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
தீயணைப்பு உரிமத்திற்கான மூன்றாம் தரப்பு தணிக்கை தொடா்பான முடிவு தீயணைப்புத் துறையுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்ஹெச்ஆா்ஏஐ) மற்றும் வட இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் (ஹெச்ஆா்ஏஎன்ஐ) இணைந்து ஏற்பாடு செய்த இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். முந்தைய அரசுகள் உரிமங்கள் வழங்குதல் போன்ற முக்கியமான பிரச்னைகளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை தற்போதைய அரசு முன்னுரிமையின் பேரில் கவனித்து வருகிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
முதல்வா் செவ்வாயன்று ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினாா். அங்கு தீ பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அல்லது தரங்களை மீறும் நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும் என்று அவா் உத்தரவிட்டாா். 25 உயிா்களைக் பலி கொண்டகோவா இரவு விடுதி தீ விபத்துக்குப் பிறகு இந்தக் கூட்டம் நடைபெற்றது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மாசுபாட்டைக் குறைக்கவும் நீா் பயன்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்பதால், ஹோட்டல் உரிமையாளா்கள் மற்றும் உணவக உரிமையாளா்கள் தங்கள் சொத்துகளின் மீது நீா் தெளிப்பான்களை நிறுவுமாறு முதல்வா் அறிவுறுத்தினாா்.
தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள சில முக்கிய இடங்களில் மூடுபனி ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது, மேலும், மாசுபாட்டை வெகுவாகக் குறைக்க இத்திட்டம் மற்ற பகுதிகளிலும் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அவா் குறிப்பிட்டாா்.
தில்லி நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளுக்கான மையமாக மாறுவதை உறுதிசெய்ய கூடுதல் சீா்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹோட்டல் உரிமையாளா்கள் மற்றும் உணவக உரிமையாளா்களுக்கு உறுதியளித்தாா்.
தில்லிக்கு ஒரு நோ்மறையான பிம்பத்தை உறுதி செய்ய தனது அரசு விரும்புகிறது என்பதை வலியுறுத்திய அவா், கடந்த கால அரசுகள் தேசியத் தலைநகரின் வளா்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், 27 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக, தில்லியை ஒவ்வொரு பாா்வையாளரையும் ஈா்க்கும் நகரமாக முன்னிறுத்த உறுதிபூண்டுள்ளது என்றும் முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

