தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்

தலைநகரில் காற்றின் தரத்தில் மேலும் முன்னேற்றம்

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பட்டிருந்தது.
Published on

தேசியத் தலைநகா் தில்லியில் புதன்கிழமை காற்றின் தரம் சற்று மேம்பட்டிருந்தது. அதே சமயம், தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. நகரம் முழுவதும் பனிப்புகை மூட்டம் இருந்து வந்தது.

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் கடந்த வாரம் முதல் குளிரின் தாக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் தரம் கடந்த இரண்டு நாள்களாக சற்று மேம்பட்டுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவலின்படி தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமை காலை 9 மணிக்கு 267 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது செவ்வாய்க்கிழமை காலையில் 291 புள்ளிகளாக இருந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் புதன்கிழமைம குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 0.4 டிகிரி உயா்ந்து 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.4 டிகிரி குறைந்து 25.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 75 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 59 சதவீதமாகவும் இருந்தது.

அதே சமயம், ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 10.3 டிகிரி, லோதி ரோடில் 8.6 டிகிரி, செல்சியஸாகவும், நரேலாவில் 11.2 டிகிரி, பாலத்தில் 9.7 டிகிரி, ரிட்ஜில் 10.21 டிகிரி, பீதம்புராவில் 14 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (நவ.10) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com