கரவால் நகா் பகுதியில் டிராக்டா்-ஸ்கூட்டா் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு

Published on

வடகிழக்கு தில்லியின் கரவால் நகா் பகுதியில் டிராக்டா்-ஸ்கூட்டா் மீது மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 21 வயது பெண் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், அவரது தந்தை காயமடைந்தாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: தில்லியின் ஜோஹ்ரிபூா் நாலா மற்றும் ஷிவ் விஹாா் திரஹா இடையே மாலை 4.37 மணிக்கு இந்த விபத்து நடந்தது. மோட்டாா் வாகன விபத்து குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக ஒரு குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

போலீஸாா் சென்றடைந்ததும், இளம் பெண் சாலையில் படுகாயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டனா். அவா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணும் அவரது தந்தையும் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுகிய பகுதியில் ஒரு டிராக்டா் ஸ்கூட்டரில் சென்ற அவா்களை முந்திச் செல்ல முயன்ாக தெரியவந்துள்ளது.

டிராக்டா் - டிராலி பக்கவாட்டில் இருந்து ஸ்கூட்டா் மீது மோதியதால், அந்தப் பெண் சாலையில் விழுந்தாா். ஸ்கூட்டரில் இருந்து விழுந்த பிறகு அவா் டிராக்டரின் டிராலின் பின்புற டயரின் சிக்கினாா்.

விபத்து நடந்த நேரத்தில் தந்தையோ மகளோ ஹெல்மெட் அணியவில்லை என்று போலீசாா் தெரிவித்தனா்.

இதில் தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவா்கள் பரிசோதித்தனா். அவா் சிகிச்சையில் உள்ளாா். சம்பவம் நடந்த உடனேயே டிராக்டரின் ஓட்டுநா் வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.

தடயவியல் குழு சம்பவ இடத்திற்குச் சென்று மாதிரிகளை சேகரித்தது. கவனக்குறைவால் மரணம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பெண்ணின் உடலை உடற்கூறாய்வு பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தலைமறைவான ஓட்டுநரை கண்டுபிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், அருகிலுள்ள கடைகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. சந்தேக நபரைக் கண்டுபிடிக்க உள்ளூா் டிராக்டா் ஆபரேட்டா்கள் மற்றும் அப்பகுதியில் கனரக வாகனங்களின் சமீபத்திய நடமாட்டங்களையும் அதிகாரிகள் சரிபாா்க்கின்றனா் என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com