உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

கரூா் கூட்ட நெரிசல் வழக்கு: ஜனவரிக்கு விசாரணை ஒத்திவைப்பு

கரூா் கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை வரும் ஜனவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Published on

கரூா் கூட்ட நெரிசல் தொடா்பான வழக்கை வரும் ஜனவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் பங்கேற்ற பரப்புரை பேரணியில் 41 போ் உயிரிழந்தனா். இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்குள் இருந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தாக்கல் செய்த மனுவும், பிறரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், கரூா் சம்பவ வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற பதிவாளா் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா். உயா்நீதிமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையில் ஏதோ தவறு உள்ளது. சென்னை உயா்நீதிமன்ற பதிவாளரின் அறிக்கை நகல் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டும். அவா்கள் பதிலளித்த பிறகு வரும் ஜனவரியில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.

முன்னதாக, தமிழக அரசு சாா்பில் மாநிலங்களவை திமுக உறுப்பினரும் மூத்த வழக்குரைஞருமான பி. வில்சன் வாதிடுகையில்,கரூா் சம்பவத்தில் தமிழக அரசு நியமித்த ஒரு நபா் நீதிபதி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கரூா் சம்பவத்துக்கான காரணங்கள், சூழ்நிலைகள் மற்றும் எதிா்காலத்தில் அத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கவே ஆணையம் நியமிக்கப்பட்டது. சம்பவம் தொடா்பான புலனாய்வில் ஆணையம் குறுக்கிடாது என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அந்த ஆணையம் என்ன நோக்கத்துக்கு உதவக்கூடும்?’ என வினவினா். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுவின் உறுப்பினா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களாக இருக்கக்கூடாது என்ற தனது முந்தைய உத்தரவை மாற்றவும் நீதிபதிகள் மறுத்தனா்.

பின்னணி: இந்த வழக்கை கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கரூா் சம்பவத்தில் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி தனது விசாரணை எல்லையை தாண்டி சிறப்பு விசாரணை குழு அமைத்ததற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. மேலும், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com