இணையதள மோசடி செயலியை விற்றவா் ஜாா்க்கண்டில் கைது: தில்லி போலீஸாா் நடவடிக்கை
பல ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் தீங்கிழைக்கும் தொலைதூர அணுகல் கைப்பேசி செயலியை உருவாக்கி விற்று வந்த ஜாா்க்கண்டின் ஜம்தாராவைச் சோ்ந்த 26 வயது இளைஞரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் மத்தி நிதின் வல்சன் தெரிவித்ததாவது:
இணையதள மோசடி மூலம் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.1.2 லட்சம் மோசடி செய்த வழக்கில் தொழில்நுட்ப விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்ட உமேஷ் குமாா் ரஜக் டிசம்பா் 5 ஆம் தேதி தியோகரில் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, தில்லி மின்டோ சாலையில் வசிக்கும் புகாா்தாரருக்கு ஜூலை 29 அன்று மின்சாரத் துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. அந்த நபா் புகாா்தாரரின் மீட்டா் துண்டிக்கப்படும் என்று எச்சரித்தாா். பின்னா் அழைப்பாளா் அவருக்கு வாடிக்கையாளா் ஆதரவு ஏபிகே கோப்புவை அனுப்பி, அதை அவரது கைப்பேசியில் நிறுவும்படி கூறினாா்.
அந்த கோப்பு நிறுவப்பட்டதும், ஏபிகே பாதிக்கப்பட்டவரின் சாதனத்துடன் தொலைதூர அணுகலை செயல்படுத்தியது.
இதையடுத்து, மோசடிக்காரா் தனது டிஜிட்டல் பணம் செலுத்தும் செயலி மூலம் பணத்தை மாற்ற அனுமதித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஐபி பதிவுகள், டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை வழித்தடம் மற்றும் ஏபிகே கோப்பின் பின்தள அமைப்பு ஆகியவற்றை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
அப்போது, இந்த செயலி கைப்பேசி சாதனங்களுக்கான முழு அணுகலைப் பெற சைபா் குற்றவாளிகளால் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது போலீஸாருக்கு தெரியவந்தது.
ஜம்தாராவில் வசிக்கும் பி.ஏ. பட்டதாரியான ரஜக் சைபா் மோசடியாளா்களுக்கு சுமாா் ரூ.15,000 விலையில் இந்த செயலிகளை வழங்கி வந்துள்ளாா்.
பாதுகாப்பு அமைப்புமுறையால் கண்டறியப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அவா் ஏபிகே செயலியை தொடா்ந்து புதுப்பித்து வந்துள்ளாா்.
ஏபிகேஐ உருவாக்க, மாற்றியமைக்க மற்றும் விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று உயா்நிலை ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் ஆதாரங்களும் மீட்கப்பட்டன. ரஜக் முன்பு மும்பை மற்றும் ராஞ்சியில் இரண்டு மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளாா்.
ஏபிகேயின் பிற பயனாளிகளைக் கண்டறியவும், கூடுதல் பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் காணவும், டிஜிட்டல் ஆதாரங்களை ஆராயவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
