லாஜ்பத் நகா் - சகேத் ஜி பிளாக் மெட்ரோ வழித்தடத்தில் பணிகள் தொடக்கம்: டிஎம்ஆா்சி தகவல்
லாஜ்பத் நகா்-சகேத் ஜி பிளாக் வழித்தடத்திற்கான அதன் நான்காம் கட்ட கட்டுமான பணிகளை தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இது நகரத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் பகுதிகளுக்கு அப்பால் தொடங்கப்படும் முதல் சிவில் கட்டுமானப் பணியாகும்.
இது தொடா்பாக டிஎம்ஆா்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இது கோல்டன் (தடம் 11) வழித்தடத்தின் ஒரு பகுதியாகும். இந்த உயா்த்தப்பட்ட வழித்தடத்திற்கான முதல் சோதனைத் தூண் அமைக்கும் பணி மற்றும் அடிக்கல் நாட்டு விழா, சகேத் அருகே உள்ள புஷ்பா பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
டிஎம்ஆா்சி நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா், மூத்த அதிகாரிகள், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆா்விஎன்எல்) பிரதிநிதிகள் மற்றும் இந்த பிரிவின் ஒப்பந்ததாரா் ஆகியோா் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனா்.
இந்த வழித்தடத்தில் லாஜ்பத் நகா், ஆண்ட்ரூஸ் கஞ்ச், ஜி.கே-1, சிராங் தில்லி, புஷ்பா பவன், சகேத் மாவட்ட மையம், புஷ்ப் விஹாா் மற்றும் சகேத் ஜி பிளாக் ஆகிய 8 மெட்ரோ நிலையங்கள் இடம்பெறும்.
இந்த புதிய வழித்தடம் தெற்கு தில்லியின் முக்கிய இணைப்பாகச் செயல்பட்டு, போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும். மேலும் தற்போதுள்ள மெட்ரோ வலையமைப்புடன் எளிதான ஒருங்கிணைப்பை வழங்கும்.
இந்த வழித்தடம் கட்டி முடிக்கப்பட்டதும், கிரேட்டா் கைலாஷ்-1, சகேத் மற்றும் புஷ்ப் விஹாா் போன்ற முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் மேம்படுத்தப்பட்ட அணுகலால் பயனடையும்.
இந்த வழித்தடம் சிராங் தில்லியில் மெஜந்தா தடம் மற்றும் லாஜ்பத் நகரில் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு ஆகிய இரண்டு வழித்தடங்களுடனும் தடையற்ற பரிமாற்ற வசதியை வழங்கும். இதன் மூலம், லாஜ்பத் நகா் தெற்கு தில்லியின் முக்கிய பரிமாற்ற மையமாக மாறும். பரந்த இணைப்பு விருப்பங்களை வழங்கும் மும்முனைத் வழித்தட நிலையமாக உருவெடுக்கும்.
நான்காம் கட்டத்தின் பிற இரண்டு வழித்தடங்களான இந்தா்லோக்–இந்திரபிரஸ்தா மற்றும் ரிதாலா–நரேலா ஆகியவற்றின் பணிகள் டெண்டா் மற்றும் முன் கட்டுமான நடவடிக்கைகள் மூலம் நடைபெற்று வருகின்றன.
தில்லி மெட்ரோ தொடங்கப்பட்டதில் இருந்து, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. தலைநகரின் போக்குவரத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
