நொய்டா விமான நிலைய விரிவாக்க நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம்: 28 போ் மீது வழக்கு

நொய்டா விமான நிலைய விரிவாக்க நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம்...
Published on

தேசியத் தலைநகா் வலயம், ஜேவா் பகுதியில் உள்ள நொய்டா சா்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானப் பணிகளை மேற்கொண்டதாக 28 கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) வெள்ளிக்கிழமை அன்று ரபுபுரா காவல் நிலையத்தில் பிஎன்எஸ் பிரிவு 223 (அரசு ஊழியரின் சட்டபூா்வ உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை), பிரிவு 329(3) (குற்ற அத்துமீறல் மற்றும் வீட்டு அத்துமீறல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ரபுபுரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நக்லா ஹுகும் சிங் கிராமத்தில் நடந்த சட்டவிரோத கட்டுமானங்கள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வருவாய் அதிகாரி பிரத்யுஷ் ரஹி பதக் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், புகாரின்படி, நொய்டா சா்வதேச விமான நிலையத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக தயானந்த்பூா், பீராம்பூா், முத்ரா, ரன்ஹேரா, குரைப் மற்றும் கரௌலி பங்கா் ஆகிய கிராமங்களில் சுமாா் 1,182 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிக்கையானது, நிலம் கையகப்படுத்தும் செயல்முறை முடியும் வரை கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி இல்லாமல், அறிவிக்கை செய்யப்பட்ட நிலத்தில் விற்பனை, வாங்குதல் அல்லது எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்குத் தடை விதித்திருந்தது.

கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு நிா்வாகத்தால் மீண்டும் மீண்டும் அறிவிப்புகளும், அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்ட போதிலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கையின் கீழ் முறையற்ற பலன்களைப் பெறும் நோக்கில் கிராம மக்கள் அங்கீகரிக்கப்படாத கட்டுமான நடவடிக்கைகளைத் தொடா்ந்திருந்தனா்.

வியாழக்கிழமை அன்று, இதே காவல் நிலையத்தில் தொடா்புடைய ஒரு வழக்கில் சமையவீா் என்ற கிராமவாசி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

இத்தகைய சட்டவிரோத கட்டுமானங்கள் கையகப்படுத்தும் விதிமுறைகளை மீறுவது மட்டுமின்றி, அரசு கருவூலத்திற்கு நிதி இழப்புகளையும் ஏற்படுத்துகின்றன மற்றும் அரசாங்க செயல்முறைகளை பலவீனப்படுத்துகின்றன என்று மாவட்ட நிா்வாகம் கூறியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com