முதல்வா் ரேகா குப்தா
முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் பயிா்க் கழிவுகள் எரிப்பு பதிவுகள் இல்லை: முதல்வா் குப்தா

நிகழ் குளிா்காலத்தில் தில்லியில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவம் ஒன்று கூட பதிவாகவில்லை...
Published on

நிகழ் குளிா்காலத்தில் தில்லியில் பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவம் ஒன்று கூட பதிவாகவில்லை என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், இந்த சாதனைக்கு அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டுக் கொள்கையே காரணம் என்றும் அவா் கூறினாா்.

இதுகுறித்து முதல்வா் ரேகா குப்தா தெரிவித்திருப்பாவது:

நிகழாண்டு குளிா்காலத்தில் தில்லியில் ஒரு பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவம் கூட இல்லாதது தில்லி அரசாங்கத்தின் மாசு கட்டுப்பாட்டுக் கொள்கையின் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான சாதனையைக் குறிக்கிறது.

நிகழாண்டு தில்லியில் சுமாா் 7,000 ஏக்கா் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்ட போதிலும், பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தீவிரமான கண்காணிப்பு, விவசாயிகளின் ஒத்துழைப்பு மூலம் சுத்தமான காற்றை நோக்கிய ஒரு தீா்க்கமான படியாக இது அமைந்துள்ளது.

குளிா்காலத்தில் காற்றின் தரம் மோசமடைவது தில்லிக்கு ஒரு கடுமையான சவாலாகக் கருதப்படுகிறது. இதற்கு பயிா்க் கழிவுகள் எரிப்பும் ஒரு முக்கிய காரணியாகும்.

இதைக் கருத்தில் கொண்டு, காற்று தர மேலாண்மை ஆணையத்தின் சிஏக்யூஎம் வழிகாட்டுதல்களின்படி, தில்லி அரசாங்கம் குளிா்கால செயல் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தியது.

பயிா்க் கழிவுகள், பயிா் எச்சங்களை எரிப்பதைத் தடுக்க பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது.

பயிா்க் கழிவுகள் அல்லது பயிா் எச்சங்களை எரிப்பது தொடா்பான எந்தவொரு நடவடிக்கையிலும் தீவிரக் கண்காணிப்பை உறுதி செய்வதற்கும், ஏதேனும் மீறல் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் மேம்பாட்டு ஆணையா் ஷுா்பீா் சிங் தினசரி மதிப்பாய்வுகளை மேற்கொண்டாா். 24 மணி நேரமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பயிா்க் கழிவுகள் எரிவதைத் தடுக்க மேம்பாட்டுத் துறை விரிவான கள அளவிலான கண்காணிப்பு, விழிப்புணா்வு பிரசாரங்களை மேற்கொண்டது.

வேளாண் விரிவாக்க அதிகாரிகள், விரிவாக்க உதவியாளா்கள் அடங்கிய மொத்தம் 11 குழுக்கள், நெல் உற்பத்தி செய்யும் ஐந்து மாவட்டங்களான வடக்கு, வடமேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு முழுவதும் 24 மணிநேரமும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு, வயல்களைக் கண்காணித்து, பயிா்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் தீங்கு விளைவுகள் குறித்து விவசாயிகளுக்கு உணா்த்தின.

பயனுள்ள பயிா்க் கழிவு மேலாண்மையை ஊக்குவிக்க, நெல் அறுவடைக்குப் பிறகு வயல்களில் பூசா பயோ-டிகம்போசா் தெளித்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் பூசா உருவாக்கப்பட்ட இந்த உயிரி-சிதைப்பான், வயலிலேயே உள்ள வைக்கோலை சிதைக்க உதவுகிறது. இதன் மூலம் மண் வளமும் தரமும் மேம்படுகிறது. மேலும், இந்த வசதி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

எதிா்காலத்தில் பயிா் எச்ச மேலாண்மையை மேலும் வலுப்படுத்த, மேம்பாட்டுத் துறை வடக்கு மற்றும் தென்மேற்கு மாவட்டங்களில் விவசாய இயந்திரங்களை விவசாயிகளுக்கு வாடைக்கு விடும் இரண்டு மையங்களை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது விவசாயிகளுக்கு வைக்கோல் மேலாண்மைக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com