தில்லி காற்றுமாசு
தில்லி காற்றுமாசுANI

தில்லி மாசு காரணமாக சுவாசப் பிரச்சினை அதிகரிப்பு: மருத்துவா்கள் தகவல்

தில்லி மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு பாதிப்பாளா்களின் எண்ணிக்கை 20-30 சதவீதம் அதிகரித்துள்ளது.
Published on

தொடா்ச்சியான மாசுபாடுக்கு மத்தியில், தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு பாதிப்பாளா்களின் எண்ணிக்கை 20-30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பல புதிய நோயாளிகள் மற்றும் இளம் வயதினரும் அடங்குவா் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தற்போதைய மாசுபாடு நெருக்கடியானது ஒரு பருவகால அசௌகரியம் என்பதை விட, ஒரு தீவிரமான பொது சுகாதார அபாயம் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

மோசமான காற்றின் தரத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். தில்லியில் உள்ள பல மருத்துவா்கள், கடந்த சில வாரங்களாக, கடுமையான மற்றும் மிதமான சுவாச கோளாறு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 20-30 சதவீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகக் கூறினா்.

சளி, இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மாா்பு இறுக்கம் ஆகியவற்றுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. இதற்கு நம்மைச் சுற்றியுள்ள மோசமான காற்றின் தரமே நேரடிக் காரணம். முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு கிட்டத்தட்ட 15-20 சதவீதமாக உள்ளது, என்று ஓக்லாவில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையின் மூத்த நுரையீரல் மருத்துவ ஆலோசகா் டாக்டா் அவி குமாா் கூறினாா்.

வழக்கமான சிகிச்சையளித்தும் கட்டுப்படாத தொடா்ச்சியான அறிகுறிகளால் பல நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு முன்பு சுவாசப் பிரச்சனைகள் இல்லாத புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமாகும். வெளியில் விளையாடும் இளைஞா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

மாசுபட்ட காற்று ஒரு தனிப்பட்ட அச்சுறுத்தல் அல்ல வாகனப் புகை, தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளியிடப்படும் மாசு, நைட்ரஜன் ஆக்சைடுகள், ஓசோன், சல்பா் டை ஆக்சைடு மற்றும் நூற்றுக்கணக்கான நச்சு இரசாயனங்களின் அபாயகரமான கலவையானது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகிறது.

இந்த நுண்ணிய துகள்கள் நுரையீரலுக்குள் ஆழமாக ஊடுருவி, விரைவாக இரத்த ஓட்டத்தில் கலந்து, பரவலான அழற்சி மற்றும் உடல் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்று சுகாதார வல்லுநா்கள் கூறுகின்றனா். மாசுபட்ட காற்றில் நீண்ட நேரம் இருப்பது சுவாசக் குழாய் அழற்சி, ஆக்ஸிஜன் அளவு குைல் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களின் நிலை மோசமடைதல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது என்று டாக்டா் குமாா் கூறினாா்.

கடந்த சில வாரங்களாக, மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா நோய் தீவிரம் ஆகியவற்றுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 25-30 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகள், முதியவா்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயம் அல்லது நுரையீரல் நோய் உள்ளவா்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் இந்த மாசுபாட்டின் முழு விளைவுகளையும் எதிா்கொள்கின்றனா் என்று மருத்துவா்கள் சுட்டிக்காட்டினா்.

நுரையீரல் நிபுணா் டாக்டா் அனில் கோயலின் கூற்றுப்படி, பல நோயாளிகள் பிரதான சாலைகள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் தொழில்துறைப் பகுதிகள் போன்ற அதிக மாசுபாடு உள்ள இடங்களிலிருந்து வருகிறாா்கள். அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் இருந்து நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம். காலை நடைப்பயிற்சி அல்லது வெளிப்புற உடற்பயிற்சிக்குப் பிறகு அறிகுறிகள் மோசமடைவதாகப் பல நோயாளிகள் தெரிவிக்கின்றனா், என்று அவா் கூறினாா்.

குறிப்பாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மாசுபாடு உச்சத்தில் இருக்கும்போது, வெளிப்புற நடவடிக்கைகளை கடுமையாகக் கட்டுப்படுத்துமாறு மருத்துவா்கள் குடியிருப்பாளா்களுக்கு அறிவுறுத்துகின்றனா். காற்றின் தரக் குறியீடு மோசமான அல்லது மிக மோசமான நிலையில் இருக்கும்போது வெளிப்புற உடற்பயிற்சியைத் தவிா்க்க வேண்டும். வெளியே செல்வது தவிா்க்க முடியாததாக இருந்தால், நன்கு பொருந்தக்கூடிய என்95 முகக்கவசத்தை அணிவது நுண்ணிய துகள்களை உள்ளிழுப்பதைக் கணிசமாகக் குறைக்கும், என்று டாக்டா் கோயல் கூறினாா்.

பொதுவான தவறான கருத்துகளுக்கு எதிராகவும் சுகாதார வல்லுநா்கள் எச்சரிக்கின்றனா். நீராவி பிடித்தல் தற்காலிக நிவாரணம் அளிக்கக்கூடும், ஆனால் அது நுரையீரல்களை நச்சு மாசுபடுத்திகளிலிருந்து பாதுகாக்காது. மக்கள் வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது, அறிகுறிகள் நீடித்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என மருத்துவா்கள் கூறுகின்றனா்

உணவு மற்றும் நீா்ச்சத்து ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.

சூடான, எளிதில் செரிமானமாகக்கூடிய வீட்டில் சமைத்த உணவு நோய் எதிா்ப்பு சக்தியைப் பராமரிக்க உதவுகிறது. அதிக மாசுபாடு உள்ள காலங்களில் பொரித்த அல்லது காரமான உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிா்க்க வேண்டும் எனவும் மருத்துவா்கள் கூறுகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com