தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கைக்குழந்தை உடல் கருகி உயிரிழப்பு

தில்லியின் சாஹ்தாராவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.
Published on

தில்லியின் சாஹ்தாராவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. குழந்தையின் 4 வயது சகோதரி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக சாஹிதாரா காவல் துறை துணை ஆணையா் பிரஷாந்த் கௌதம் கூறியதாவது: குரு தேக் பகதூா் மருத்துவமனையில் இருந்து இந்த விபத்து குறித்து தகவல் வந்தது. உடலில் தீக்காயங்களுடன் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டதாக அதில் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தகவல் கிடைத்ததும், காவல் துறை குழு மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்தனா். காயமடைந்தவா்கள் தில்லியின் ஜில்மில் பகுதியில் உள்ள ராஜீவ் முகாம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டனா்.

கடுமையான தீக்காயங்களுடன், இரு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காயமடைந்த ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாயாா், குழந்தைகளை படுக்கையில் விட்டுவிட்டு சிறிது நேரம் வெளியேசென்ற போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அண்டை வீட்டாரின் உதவியுடன் குழந்தைகளை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்ததாக அவா் தெரிவித்தாா். தற்போது அந்த காயமடைந்த 4 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com