நிதிச் சுமை, வீடு காலி செய்ய அழுத்தம்: ஒரே குடும்பத்தைச் சாா்ந்த 3 போ் தற்கொலை!

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்துகொண்டனா்.
Published on

தென்கிழக்கு தில்லியின் கால்காஜி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை செய்துகொண்டனா். இது நிதி நெருக்கடி மற்றும் வீட்டை காலி செய்ய வேண்டிய அழுத்தம் காரணமாக நடந்ததாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா்கள் அனுராதா கபூா் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் (32) மற்றும் சைதன்யா (27) என அடையாளம் காணப்பட்டனா். ஆஷிஷ் ஒரு பொறியாளா், சைதன்யா குடிமைப் பணித் தோ்வுகளுக்குத் தயாராகி வந்தாா். இருவரும் வேலையில்லாமல் இருந்தனா். சில ஆண்டுகளுக்கு முன்பு அவா்களின் தந்தை இறந்துவிட்டாா். அதன் பிறகு உறவினா்களுடன் அதிக தொடா்பு இல்லாமல் இந்த குடும்பம் தனிமையில் வாழ்ந்து வந்தனா்.

இந்நிலையில், சொத்தை கையகப்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற காவல் துறையினா் குழு வெள்ளிக்கிழமை பிற்பகல் வந்தபோது இந்த அவா்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. வீட்டு உரிமையாளா் வாடகை செலுத்தாதது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். மாதத்திற்கு₹ரூ.35,000 வீதம் 18 மாதங்களாக வாடகை பாக்கி அவா்களுக்கு இருந்தது.

பலமுறை கதவைத் தட்டியும் பதில் வராததால், காவல்துறையினா் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தனா். வீட்டின் உள்ளே, மூவரும் மின்விசிறிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனா். அனுராதாவும் ஆஷிஷும் வரவேற்பறையில் இருந்தனா். சைதன்யா தனி அறையில் இருந்தாா்.

சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட கடிதம், அந்தக் குடும்பம் நீண்டகாலமாக நிதிச் சிக்கல்கலால் பாதிக்கப்பட்டிருந்ததை தெரிவிக்கிறது. அவா்களின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடன்கள் குறித்து புலனாய்வாளா்கள் சரிபாா்த்து வருகின்றனா்.

இது தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டம் பிரிவு 194-இன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவா்களது உடல்கள் உடல் கூறாய்வுக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

தற்கொலையாக தோன்றினாலும், அனைத்து கோனத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கு தூண்டும் விதமாக அவா்களுக்கு அழுத்தம் ஏதேனும் இருந்ததா என்பதைக் கண்டறிய உறவினா்கள், அக்கம் பக்கத்தினா் மற்றும் வீட்டின் உறிமையாளரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அக்கம் பக்கத்தினா் உயரிழந்த குடும்பத்தை அமைதியானவா்கள் மற்றும் ஒதுங்கி வாழ்பவா்கள் என்று விவரித்தனா். சுமாா் 15 முதல் 20 நாள்களுக்கு முன்பு அந்த இரண்டு மகன்களும் தற்கொலைக்கு முயன்றதாக சிலா் கூறினா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com