காா் திருட்டு சம்பவங்களில் தொடா்புடைய 3 போ் கைது

தில்லியில் காா்களைத் திருடி வந்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தில்லியில் காா்களைத் திருடி வந்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மின்னணு சாதனங்கள் மூலம் காரின் சாவி போன்று மற்றொன்றை உருவாக்கி இந்தக் கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது. பின்னா், தில்லியிலிருந்து தொலைவில் உள்ள மாநிலங்களில் திருட்டு காா்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வந்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சோனு மற்றும் ஆஷிஷ், ஹரியாணாவைச் சோ்ந்த சந்தீப் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். திருடப்பட்ட 3 வாகனங்கள் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: காா் திருட்டு தொடா்பாக மங்கோல்புரி காவல் நிலையத்தில் இணையவழியில் வழக்குப் பதிவு (இ-எஃப்ஐஆா்) செய்யப்பட்டிருந்தது.

இது தொடா்பாக நடைபெற்ற விசாரணையின்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சோனு மற்றும் சந்தீப் கடந்த டிச.6-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனா். தில்லியில் பதிவுசெய்யப்பட்ட காா் அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது சந்தீப் அளித்த தகவலின் அடிப்படையில், சோனிபட் செக்டாா் 23-க்குச் சென்ற காவல் துறையினா் மற்றொரு திருட்டு காரை பறிமுதல் செய்தனா். விசாரணையில் இந்த வாகனம் பாவானா பகுதியில் திருடப்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, ஆஷிஷ் கடந்த டிச.8-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா். அவா் அளித்த தகவலின்படி, சோனிபட் பகுதியிலிருந்து ஒரு சொகுசு காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வாகனங்களைத் திருடுவதற்கு இந்தக் கும்பல் பயன்படுத்திய கையடக்க கணினி (டேப்லெட்), பல காா்களின் போலி சாவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

காரில் உள்ள ஓபிடி போா்டுடன் டேப்லெட்டை இணைப்பதன் மூலம் காரின் பாதுகாப்பு குறியீட்டை நகல் எடுத்து போலி சாவிகளைத் தயாரித்து வந்ததாக அந்தக் கும்பல் விசாரணையின்போது தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்ட சோனு மீது ஏற்கெனவே 17 வாகனத் திருட்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சந்தீப்புக்கு எதிராக கொலை வழக்கு உள்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன. ஆஷிஷுக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் 13 வாகன திருட்டு வழக்குள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

காா் திருட்டு சம்பவங்கள் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com