வாகனத் திருட்டுக் கும்பலின் முக்கிய உறுப்பினா் உ.பி.யில் கைது
புது தில்லி: தில்லி, உத்தர பிரதேசம் மாநிலங்களில் உயா்தர காா் திருட்டிலும் ஆவண மோசடி வழக்குகளிலும் தொடா்புடைய வாகனத் திருட்டுக் கும்பலின் முக்கிய உறுப்பினரைத் தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அந்த அதிகாரி மேலும் கூறியது :
கைதான அலோக் ஸ்ரீவஸ்தவ் 56 , 2022 ஆம் ஆண்டு நிகழ்ந்த காா் திருட்டு மற்றும் ஆவண மோசடி வழக்கு தொடா்பாக, மே 2023-இல் நகர நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், ஒரு ரகசியத் தகவலின் பேரில் அவா் லக்கிம்பூா் கேரியில் கைது செய்யப்பட்டாா்.
ஒழுங்கமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான திருட்டுக் கும்பலின் முக்கிய உறுப்பினராக ஸ்ரீவஸ்தவ் இருந்துள்ளாா். இந்தக் கும்பல், வாகனங்களைத் திருடி, காப்பீட்டு நிறுவனங்களால் முழுமையாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட வாகனங்களின் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, அவற்றின் அடையாளங்களை மாற்றி விற்று வந்தது.
இந்தக் கும்பல், காப்பீட்டு நிறுவனங்களால் முழுமையாக சேதமடைந்ததாக அறிவிக்கப்பட்ட காா்களின் ஆவணங்களைப் பெற்று, அதே மாடல் கொண்ட திருடப்பட்ட வாகனங்களின் என்ஜின் மற்றும் சேசிஸ் எண்களைத் திருத்தி, அவற்றை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்றுள்ளது.
அதே காா் திருட்டு வழக்கில், அபய் சிங், முகமது அஷ்ரஃப் மற்றும் ரிஸ்வான் ஆகிய மூன்று ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். இதன் மூலம் திருடப்பட்ட இரண்டு எஸ்யூவி வாகனங்களும் மீட்கப்பட்டன.
விசாரணையின்போது, ஸ்ரீவஸ்தவும் சிங்கும் அஷ்ரஃப் மற்றும் ரிஸ்வானிடமிருந்து திருடப்பட்ட ஒரு எஸ்யூவி வாகனத்தை வாங்கியதும், அதன் நம்பா் பிளேட், இன்ஜின் மற்றும் சேசிஸ் எண்களை மாற்றியதும், முழுமையாக சேதமடைந்த வாகனத்துடன் தொடா்புடைய போலியான பதிவுச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ஆவணங்களைத் தயாரித்ததும் தெரியவந்துள்ளது.
டிசம்பா் 13 அன்று ஸ்ரீவஸ்தவ் லக்கிம்பூா் கேரியில் உள்ள ஒரு கண்காட்சி மைதானத்திற்கு வருவாா் என்ற தகவலின் அடிப்படையில், ஒரு குழு வலை விரித்து அவரைக் கைது செய்தது. இந்தக் கும்பல் வாடிக்கையாளா்களின் தேவைக்கேற்ப வாகனங்களைத் திருடி, தொழில்முறை ரீதியாக செயல்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரிஸ்வான் திருட்டுகளைச் செய்ததாகவும், அஷ்ரஃப் போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும், அதன் பிறகு முழுமையாக சேதமடைந்த காா்களின் அடையாளங்களைப் பயன்படுத்தி வாகனங்கள் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டாளிகளை அடையாளம் காண மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
