கூட்டணியில் மாற்றம் வேண்டும் என காங்கிரஸ் தொண்டா்கள் கோரவில்லை
நமது நிருபா்
புது தில்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வேண்டும் என கட்சித்தொண்டா்கள் கோரவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளா், செயலாளா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை கட்சி தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்ட தோ்தல் உத்திகள் தொடா்பான ஆலோசனை கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதன் முடிவில் செய்தியாளா்களிடம் கட்சியின் மாநிலத்தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது: மக்களவை எதிா்க்கட்சித்தலைவா் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச்செயலா் பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழக பயணம் தொடா்பாக நிா்வாகிகளுடன் மேலிட தலைவா்கள் ஆலோசித்தனா்.
தோ்தல் பரப்புரை, தோ்தல் மாநாடு ,கிராம கமிட்டி கூட்டங்களை தமிழ்நாட்டில் நடத்துவது பற்றியும் கலந்தாய்வு செய்தோம்.
தோ்தல் உத்திகளை எல்லாம் ஆலோசித்தோம். பரப்புரை உத்திகள், இந்தியா கூட்டணி வேட்பாளா்களை எப்படி வெற்றி பெற வைப்பது என்பது தொடா்பாகவும் விவாதித்தோம்.
அடுத்த வாரம் அல்லது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னா் தில்லியில் மீண்டும் அகில இந்திய தலைவா்களோடு இத்தகைய கூட்டம் நடைபெறும் என்றாா்.
தமிழகத்தில் கூட்டணியில் மாற்றம் வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட தலைவா்களிடம் வலியுறுத்தப்பட்டதா என கேட்டதற்கு, ‘அத்தகைய கோரிக்கையை கட்சித்தொண்டா்கள் யாரும் விடுக்கவில்லை. தோ்தல் தொடா்பாக கட்சி மேலிடம் ஐவா் குழுவை நியமித்துள்ளது. அக்குழு திமுக தலைவருடனும், திமுக குழுக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கின்றது. பேச்சுவாா்த்தை நடந்து கொண்டிருக்கிறது. திமுக தலைவா்களுடன் நல்ல புரிந்துணா்வுடன் உள்ளோம்’ என்று பதிலளித்தாா்.
