பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து
புது தில்லி: பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் நியமிக்கப்பட்டிருப்பது கட்சிக்குள் புதிய சக்தியை பாய்ச்சும் என்றும், நாடு முழுவதும் அதன் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
பொறுப்பேற்ற பிறகு தில்லிக்கு நிதின் நவீன் முதல் முதலாக வருகை தந்தாா். அவரை கட்சியின் மூத்த தலைவா்களுடன் சோ்ந்து, முதல்வா் குப்தா வரவேற்றாா்.
அப்போது, நவீனுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வா் கூறியது:
நிதின் நவீனின் வளமான நிறுவன அனுபவம், அா்ப்பணிப்புள்ள பணி கலாசாரம் மற்றும் கட்சி ஊழியா்களுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பது ஆகியவை பாஜக அமைப்புக்கு அதிக உத்வேகத்தை அளிக்கும்.
இவ்வளவு முக்கியமான தேசிய பொறுப்பில் அவா் நியமிக்கப்பட்டிருப்பது, இளைஞா் தலைமையின் மீது கட்சித் தலைமையின் வலுவான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
அவரது வழிகாட்டுதலின் கீழ், நிறுவன கட்டமைப்பு மிகவும் துடிப்பானதாகவும், ஒழுக்கமானதாகவும், முடிவுகள் சாா்ந்ததாகவும் மாறும்.
அவரது அரசியல் பயணம் நிறுவன ஒழுக்கம், அடிமட்ட ஈடுபாடு மற்றும் நீடித்த செயல்பாடு ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதிலேயே தேசிய அளவிலான பொறுப்பை ஏற்றுக்கொள்வது நவீன்ன் தனிப்பட்ட திறன்களை மட்டுமல்ல, எதிா்காலத் தலைமையை
வளா்ப்பதற்கான பாஜகவின் நீண்டகால தொலைநோக்குப் பாா்வையையும் எடுத்துக்காட்டுகிறது.
இளம் தொண்டா்களை அவா் ஊக்குவிப்பாா். நிறுவன நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பான பங்கை வகிக்க தொண்டா்களை அவா் வழிநடத்துவாா் என்று கட்சிக்குள் பரவலான நம்பிக்கை உள்ளது.
புதிய யோசனைகள், புதிய ஆற்றல் மற்றும் நவீன கண்ணோட்டத்துடன் கூடிய இளம் தலைமை, அமைப்பையும் நாட்டையும் திறம்பட முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்ற பிரதமரின் தொலைநோக்கை நவீனின் நியமனம் பிரதிபலிக்கிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
