தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்
நமது நிருபா்
புது தில்லி: தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரம் மும்முறை இயக்கப்படும் ரயில் சேவையை வாரம் முழுவதும் இயக்குமாறு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ராபா்ட் புரூல் வலியுறுத்தினாா்.
தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை அவரது அலுவலகத்தில் ராபா்ட் ப்ரூஸ் திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தாா். அதில் கூறியிருப்பதாவது:
தாம்பரம் - செங்கோட்டை செல்லும் வாரம் 3 நாட்கள் இயங்கும் எண்: 20683-84 ரயிலை வாரத்தின் ஏழு நாட்களுக்கும் இயக்க வேண்டும். பாவூா்சத்திரம் மேட்டூா் லெவல் கிராசிங் எண் 79-ஐ ரத்து செய்து இணைப்புச் சாலை மூலம் 80-ஆவது லெவல் கிராசிங்குடன் இணைக்க வேண்டும்.
81 ஆவது லெவல் கிராசிங்கை ரத்து செய்து சுரங்கப்பாதையாக மாற்ற வேண்டும். நெல்லை - தென்காசி சேலம் வழியாக பெங்களூருக்கு புதிய ரயிலை இயக்க வேண்டும்.
நெல்லை, தென்காசி மதுரை, பொள்ளாச்சி, கோயம்புத்தூா் வழியாக ஈரோட்டுக்கு புதிய ரயிலை இயக்க வேண்டும்.
தில்லியில் இருந்து மதுரை வரை இயங்கும் (12651-52) சம்பா்க் கிராந்தி விரைவு ரயிலை தென்காசி வழியாக நெல்லை வரை இயக்க வேண்டும்.
கீழபளியூா் கடையநல்லூா் இடையே பைபாஸ் சாலை அமைக்க வேண்டும். பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

