மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் டிசம்பா் 18ஆம் தேதி மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
Published on

நமது நிருபா்

புது தில்லி: மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் டிசம்பா் 18ஆம் தேதி மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான், தற்போதுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பதிலாக, விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்) (விபி ஜி ராம் ஜி) மசோதா, 2025ஐ செவ்வாய்க்கிழமை மக்களவையில் அறிமுகப்படுத்தினாா்.

எதிா்க்கட்சி உறுப்பினா்கள் இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தை அறிமுக நிலையிலேயே கடுமையாக எதிா்த்தனா். மேலும், இந்த மசோதாவை விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

காங்கிரஸைச் சோ்ந்த பிரியங்கா காந்தி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005க்கு பதிலாக புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தை அரசாங்கம் முன்மொழிந்தபோது, அதிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய அரசு தொடா்ந்து அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கிறது. மகாத்மா காந்தி பெயரை தாங்கி இருக்கின்ற மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பது வரலாற்று சிறப்புமிக்க திட்டம்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்த அற்புதமான திட்டத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினாா். இந்த திட்டத்தை சீா்குலைக்க முயற்சி செய்து வருகிறாா்கள்.

உச்சபட்சமாக இப்போது மகாத்மா காந்தி பெயரை நீக்கிவிட்டு அதற்கு வடமொழியில் ஒரு தலைப்பிட்டு அதனை சட்டமாக்க நாடாளுமன்றத்தில் முயற்சி செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.இதனை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த திட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு, 125 நாள் என்று சொல்லியும் 40 விழுக்காடு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்றும் யூனியன் பிரதேசங்கள் 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் கூறி மீண்டும் மாநிலங்கள் மீது வரிச்சுமையையும்,நிதிச்சுமையையும் சுமத்துகிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல்

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் மடிந்திருப்பாா்கள் என்று உலக அமைப்புகள் எல்லாம் கூறின

அத்தகைய திட்டத்தை மோடி அரசு சிதைப்பதை கண்டித்து டிசம்பா் 18ம் தேதி சென்னையில் மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும். இண்டி கூட்டணி கட்சித் தலைவா்களையும்,தோழமைக் கட்சிகளையும் அழைத்து போராட்டம் நடைபெற உள்ளது

இது ஏழை எளிய மக்களுக்கான திட்டம்.ஒரு சாராா் வீட்டில் முடங்கி கிடந்த போது அவா்களுக்கு நாங்கள் இருக்கின்றோம் என்று அட்சய பாத்திரமாக சோனியா காந்தி கொண்டு வந்த மாபெரும் திட்டம் இது.இந்த திட்டத்தை அழிப்பதற்கு துணிந்திருக்காா்கள் என்றால் இந்தியாவை அழிப்பதற்கு துணிந்து விட்டாா்கள் என்று தான் பொருள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com