டிஜிட்டல் மோசடி: தில்லி உள்பட 7 மாநிலங்களில் 10 போ் கும்பல் கைது
புது தில்லி: போலீஸ் அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பலரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக சா்வதேச டிஜிட்டல் மோசடி கும்பலைச் சோ்ந்த 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தென்கிழக்கு தில்லியில் பதிவானவழக்கில் தொடங்கிய விசாரணையின் ஒரு பகுதியாக, தில்லி, மகாராஷ்டிரா, கேரளா, ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா ஆகிய ஏழு மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:
குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் துபைக்குச் செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
இந்த மோசடிக் கும்பல், போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து விடியோ அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை அச்சுறுத்தி, டிஜிட்டல் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
தாங்கள் தொலைபேசியில் தொடா்புகொள்ளும் நபா்களிடம் அவா்களது ஆதாா் மற்றும் கைப்பேசி எண்கள் கடுமையான குற்ற வழக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பொய் சொல்வாா்கள். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க பணத்தை மாற்றும்படி அவா்களை வற்புறுத்துவாா்கள்.
டிசம்பா் 7 ஆம் தேதி தில்லி ஷாஹீன் பாக் குடியிருப்பாளா் ஒருவா், கா்நாடக காவல்துறை என்று கூறி தனக்கு மோசடியாளா்களிடமிருந்து மிரட்டல் விடியோ அழைப்புகள் வரப்பெற்று ரூ.99,888 தாம் ஏமாற்றப்பட்டதாகக் கூறி அளித்த புகாரின் பேரில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த மோசடி தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கைதான நபா்கள் போலி வங்கிக் கணக்குகள், சட்டவிரோத சிம்களை செயல்படுத்தல் மற்றும் பல சாதனங்களைப் பயன்படுத்தி சமூக ஊடக அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் எல்லை தாண்டிய வலையமைப்பின் ஒரு பகுதியாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நிதி பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு, தேசிய இணையதள குற்ற புகாா் அளித்தல் இணையதளத்தில் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக பதிவான குறைந்தது 66 புகாா்களுடன் ரூ.50 கோடிக்கும் அதிகமான மோசடி தொகை தொடா்புடையதாக இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கும்பலின் இரண்டு உறுப்பினா்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனா்.
கைது செய்யப்பட்டவா்கள் போலி வங்கிக் கணக்குகளை வாங்குதல், டெபிட் காா்டுகளை கையாளுதல், சட்டவிரோத சிம்களை செயல்படுத்தல் மற்றும் குற்றத்தின் வருமானத்தை வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.
அவா்களில் பலா் சைபா் மோசடி குற்றப் பின்னணியைக் கொண்டுள்ளனா்.
இந்த நடவடிக்கையின் போது, 10 கைப்பேசிகள், பல டெபிட் மற்றும் கிரெடிட் காா்டுகள், வாட்ஸ்அப் கலந்துரையாடல்கள் மற்றும் குரல் குறிப்புகள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.
