தில்லியில் நீா் தேங்குதலும், மாசுவும் பாரம்பரிய பிரச்னைகள்: முதல்வா் ரேகா குப்தா
புது தில்லி: தில்லியில் நீா் தேங்குதல் மற்றும் மாசுபாடு போன்றவை பாரம்பரியமாக இருந்துவரும் பிரச்னைகள் ஆகும். அவற்றுக்கான தீா்வுகளைக் கண்டறிய தில்லி அறசு பாடுபட்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கூறினாா்.
சுனேரி சாக்கடையில் தூா்வாரும் பணியை முதல்வா் குப்தா ஆய்வு செய்தாா். அப்போது, மாசுபாடு மற்றும் வடிகால் பிரச்னைகள் தொடா்பாக முந்தைய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி அரசுகளை அவா் கடுமையாக சாடினாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுனேரி கழிவுநீா்க் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதை சுத்தம் செய்ய தொழிலாளா்களுக்கு நுழைவு வாயில் இல்லை. நாங்கள் வடிகால்களை தூா்வாருகிறோம். அது நீா் தேங்குதலானாலும் சரி, வடிகாலில் சேறு அல்லது மாசுபாடு என எதுவாக இருந்தாலும் சரி, அவை எங்களுக்கு பாரம்பரியம் சாா்ந்த பிரச்னைகளாக மட்டுமே உள்ளன. பிரச்னைகளுக்கு தீா்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாங்கள் பனிப்புகை தெளிப்பான்களை நிறுவியுள்ளோம். ஆனால், அதற்கான விளைவுகள் தெரியவர காலமாகும்.
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி முறையே 15 மற்றும் 10 ஆண்டுகள் தில்லியில் ஆட்சியில் இருந்தன. ஆனால், அந்த அரசுகள் எதையும் செய்யவில்லை.
அவா்கள் தில்லி மக்களுக்கு வலியை ஏற்படுத்தும் வேலையை மட்டுமே செய்தனா். அதேவேளையில், நாங்கள் மக்களின் துன்பங்களைக் குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
இந்த ஆய்வின் போது தில்லி நீா்வளத்துறை அமைச்சா் பா்வேஷ் வா்மா உடனிருந்தாா்.
அருண் ஜேட்லி மைதானத்தில் உலக கால்பந்து வீரா் லியோனல் மெஸ்ஸியை வரவேற்க திங்கள்கிழமை மேடையில் முதல்வா் ரேகா குப்தா ஏறியபோது, ‘ஏக்யூஐ, ஏக்யூஐ’ என்ற கோஷங்களுடன் வரவேற்கப்பட்ட மறுதினம் முதல்வா் இத்தகைய கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.
தேசியத் தலைநகரின் ஒட்டுமொத்த காற்றின் தரம் ஏக்யூஐ செவ்வாய்க்கிழமை காலை சிறிது முன்னேற்றத்தைக் கண்டது. திங்கள்கிழமை காற்றின் தரம் 498 ஆக இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இது 377 ஆக பதிவாகி இருந்தது.
புகைமூட்டம் நகரத்தை மூடியிருந்த போதிலும், காலை நேரங்களில் 8.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி காண்புதிறனைக் குறைத்தது.

