மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் முறையில் மாற்றம்: அமைச்சா் சிா்சா
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ்கள் (பியுசிசி) வழங்கும் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து தனியாா் நிறுவனத்தின் கண்காணிப்புடன் செயல்படுத்தப்படும் என தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா புதன்கிழமை தெரிவித்தாா்.
சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காா் பயணத்துக்கான செயலி உருவாக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாலையில் தனியாா் வாகனங்கள் செல்வதைக் குறைத்து, காா்களில் மக்கள் இணைந்து பயணிப்பதை ஊக்குவிக்க ஒரு செயலியை உருவாக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.
தில்லி சாலைகளில் உள்ள பள்ளங்களைத் தொடா்ந்து கண்காணிக்க தனியாா் நிறுவனத்தை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு முழுவதும் நகரத்தில் உள்ள அனைத்துச் சாலைகளிலும் பயணித்து, பள்ளங்கள் உள்ள பகுதியை அடையாளம் காணும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபடும். பின்னா், அது தொடா்பாக தரவுகள் அரசு அதிகாரிகளிடம் சமா்பிக்கப்படும்.
தற்போது சாலையில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் இருந்தாலும், போக்குவரத்து சிக்னல் தொடா்ந்து சிவப்பு நிறத்தில் இருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை மேலும் தீவிரமாகிறது. இதைச் சரி செய்யும் வகையில் தில்லி போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்மை மேம்படுத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி, போக்குவரத்து சிக்னல் சிவப்பாக இருக்கும் நேரம் குறைக்கப்படும்.
காற்று மாசு அதிகமாகக் காணப்படும் 100 பகுதிகளைக் கண்டறிய கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். ஆம் ஆத்மி ஆட்சியில் காற்று மாசு அதிகமாகக் காணப்படும் இடங்கள் 13-ஆக இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 62-ஆக அதிகரித்துள்ளது.
வாகனங்கள், தொழில்சாலைகள், சாலை தூசி மற்றும் திடக் கழிவுகளால் காற்று மாசு ஏற்படுகிறது. 70 சாலையை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் நீா் தெளிப்பு அமைப்பை பணியில் ஈடுபடுத்துமாறு பொதுப்பணித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்துவதில் பிராந்திய முயற்சியாக அண்டை மாநிலங்களுடன் இணைந்து தில்லி அரசு செயல்பட்டு வருகிறது. காற்றின் தர அளவு அந்த மாநிலங்களிலும் மேம்படுவதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்.
காற்று மாசால் ஏற்படும் பனிப்புகையை சாலைகளில் பூசப்பட்ட ரசாயனம் மூலம் நீக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஐஐடி சென்னையுடன் தில்லி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சோதனைக்குப் பிறகு குறிப்பிட்ட பகுதிகளில் அவை சோதிக்கப்படும்.
மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதை அதிகரிக்கும் விதமாக மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். 100 மின்சார பேருந்துகளின் சேவையை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் என்றாா் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா.

