போலி சான்றிதழ் மூலம் வழக்குரைஞரான விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சட்ட பட்டப் படிப்பு முடித்தது போல் போலி சான்றிதழ் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி தில்லி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் முன்ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட வன்சந்தன் போலி எல்எல்பி பட்டச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலைச் சமா்ப்பித்து வழக்குரைஞராகப் பதிவு பெற்றிருந்தாா். ஆவணங்கள் போலியானவை என்பது சரிபாா்ப்பில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது வழக்குரைஞா் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் உள்ள பாரதிய சிக்ஷா பரிஷத் கல்வி நிறுவனத்தல் தனது சட்டப் படிப்பை முடித்ததாகவும், தில்லி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராக பதிவு செய்யும் பணியை எளிதாக்க இடைத்தரகா்களுக்கு ரூ.95,000 செலுத்தியதாகவும் வன்சந்தன் தெரிவித்தாா். ஆனால், இடைத்தரகா்கள் ஜான்சியில் உள்ள புந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தின் போலி ஆவணங்களை மாற்றி சமா்ப்பித்தாக அவா் தெரிவித்தாா்.
இதனடிப்படையில், ஜாமீன் கோரிய அவரது மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி ஷுனாலி குப்தா விசாரித்தாா். அப்போது, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையையும், ஒரு பெரிய சதியை வெளிக்கொணர காவலில் வைத்து விசாரிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டி, அந்த மனுவை அவா் தள்ளுபடி செய்தாா்.
டிசம்பா் 15-தேதியிட்ட தனது உத்தரவில், ‘இந்த வழக்கில் வன்சந்தன் மட்டுமல்லாமல், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பாா் கவுன்சிலில் பதிவு செய்ய உதவிய ஒரு கும்பல் சம்பந்தப்பட்டுள்ளனா்’ என நீதிபதி தெரிவித்தாா்.
மேலும், பாரதிய சிக்ஷா பரிஷத் கல்வி நிறுவனம், சட்டப் பட்டங்களை வழங்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகமாக கல்வித் துறையால் அங்கீகரிக்கப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
