மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

காற்று மாசுவை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கிரேப் நிலை- 3 மற்றும் கிரேப் நிலை-4 நடவடிக்கைகளால் வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி தொழிலாளா் அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை அறிவித்துள்ளாா்.
Published on

காற்று மாசுவை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கிரேப் நிலை- 3 மற்றும் கிரேப் நிலை-4 நடவடிக்கைகளால் வேலையிழந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும் என்று தில்லி தொழிலாளா் அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை அறிவித்துள்ளாா்.

அனைத்து அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களும் வியாழக்கிழமை முதல் 50 சதவீத ஊழியா்களை வீட்டிலிருந்து வேலை செய்வதை கட்டாயமாக மாற்ற வேண்டும். இல்லையெனில், நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: கிரேப் நிலை-3 நடவடிக்கைகள் 16 நாள்கள் நடைமுறையில் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும். இதேபோல, கிரேப் நிலை-4 நடைமுறையில் இருக்கும் நாள்களுக்கு தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த சலுகைகள் அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளா்களுக்கும் நீட்டிக்கப்படும். பதிவு செயல்முறை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நடவடிக்கையில் இருந்து மருத்துவமனைகள், காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைகள், தீயணைப்புத் துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் விலக்கப்பட்டுள்ளனா்.

தில்லி அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினா் போராட்டம் நடத்துகின்றனா். அவா்களின் முதல்வா் பருவகாலத்தில் ஓடிவிடுவது வழக்கம். ஆனால், எங்கள் முதல்வா் களத்தில் இருக்கிறாா். ஆம் ஆத்மி கட்சியினா் மோசமான அரசியலில் ஈடுபடுகிறாா்கள். 30 ஆண்டுகால பிரச்னையை ஐந்து மாதங்களுக்குள் ஒழிக்க முடியாது என்றாா் அமைச்சா் மிஸ்ரா.

X
Dinamani
www.dinamani.com