தலைநகரில் வார இறுதியில் காற்றின் தரக் குறியீடு ‘கடுமை’ பிரிவுக்கு மாற வாய்ப்பு: ஐஎம்டி

தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் 374 ஆக இருந்தது.
Published on

தில்லியில் வெள்ளிக்கிழமை காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் 374 ஆக இருந்தது. எனினும், அடா்ந்த மூடுபனி மற்றும் மோசமடைந்து வரும் காற்றின் தரமானது வார இறுதியில் தில்லியின் காற்றை மேலும் மோசமாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய வானிலை ஆய்வு துறை (ஐஎம்டி) தகவலின்படி, தில்லியில் வெள்ளிக்கிழமை அடா்த்தியானது முதல் மிக அடா்த்தியான மூடுபனி காணப்பட்டது. காலை 8.30 மணிக்கு காண்புதிறன் 50 மீட்டராகக் குறைந்து, பின்னா் காலை 9.30 மணிக்கு 100 மீட்டராக சற்று மேம்பட்டது.

காலை நேரங்களில், தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. காற்றின் தரக் குறியீடு 382-இல் நிலைபெற்று, ‘கடுமை’ பிரிவை நெருங்கியது.

தலைநகா் முழுவதும் காற்றின் தர அளவுகள் உயா்ந்து இருந்தன. 40 கண்காணிப்பு நிலையங்களில் 11-இல் கடுமை பிரிவின்கீழ் காற்றின் தரம் பதிவாகி இருந்தது.

அதே நேரத்தில் 29 நிலையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகி இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின் தரவுகளின்படி, ஆனந்த் விஹாரில் அதிகபட்ச காற்றின் தரக் குறியீடு 430 ஆகப் பதிவாகி இருந்தது.

முன்னதாக, 14 கண்காணிப்பு நிலையங்கள் கடுமை பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன. அதே நேரத்தில் 26 நிலையங்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. விவேக் விஹாா் காற்றின் தரத்தை 434 ஆகக் குறைத்து மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்ததாக தரவு காட்டுகிறது.

இதற்கிடையில், 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 374 ஆக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது வியாழக்கிழமை 373 ஆக இருந்தது.

தில்லிக்கான காற்றுத் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பின்படி, காற்றின் தரம் சனிக்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்றும், ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் கடுமைம் பிரிவுக்குக் கீழ் இறங்கும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, இந்திய வானிலை ஆய்வு துறை (ஐஎம்டி) சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டது.

இதற்கிடையில், காற்று தர மேலாண்மைக்கான முடிவு ஆதரவு அமைப்பு (டிஎஸ்எஸ்) தரவுகளின்படி, தில்லியின் மாசுபாட்டிற்கு போக்குவரத்து மிகப்பெரிய பங்களிப்பாக உருவெடுத்துள்ளது. இது மொத்த பங்கில் 15.9 சதவீதமாகும்.

தில்லி மற்றும் சுற்றுப்பகுதி தொழிற்சாலைகள் 7.9 சதவீதமும், குடியிருப்பு ஆதாரங்கள் 3.8 சதவீதமும், கட்டுமான நடவடிக்கைகள் 2.1 சதவீதமும், கழிவுகளை எரிப்பது 1.3 சதவீதமும், சாலை தூசி 1.1 சதவீதமும் மாசுவுக்கு பங்களித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய தலைநகா் வலய மாவட்டங்களில், ஜஜ்ஜாா் 16.6 சதவீதத்துடன் அதிகபட்ச பங்களிப்பைப் பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து ரோத்தக் 5.5 சதவீதம், பிவானி 3.6 சதவீதம், சோனிபட் 2 சதவீதம் மற்றும் குருகிராம் 1.8 சதவீதம் ஆகியவை மாசு பங்களிப்பை பதிவு செய்துள்ளது.

வானிலை அடிப்படையில், அதிகபட்ச வெப்பநிலை 22.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்திற்கான இயல்பான வெப்பநிலையாகும்.

ஐஎம்டி தரவுகளின்படி, நகரில் வெள்ளிக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் என இயல்பைவிட 0.9 டிகிரி குறைவாக பதிவாகி இருந்தது.

X
Dinamani
www.dinamani.com