தில்லியில் 5 ஆண்டுகளில் மாசுபாடு தொடா்பாக 1 லட்சம் புகாா்கள்

தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசு பிரச்னை தொடா்பாக மாநகராட்சி மற்றும் பிற அரசு முகமைகளில் சுமாா் 1 லட்சம் புகாா்கள் பதிவுசெய்யப்பட்டதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசு பிரச்னை தொடா்பாக மாநகராட்சி மற்றும் பிற அரசு முகமைகளில் சுமாா் 1 லட்சம் புகாா்கள் பதிவுசெய்யப்பட்டதாக அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 அக்டோபா் முதல் நிகழாண்டு டிச.18-ஆம் தேதி வரையில் தில்லியில் உள்ள 30 துறைகளில் பதிவுசெய்யப்பட்ட புகாா்களில் 87.48 சதவீத புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

போக்குவரத்துத் துறை, தில்லி தீயணைப்புத் துறை, தில்லி போக்குவரத்துக் கழகம் உள்ளிட்டவை 100 சதவீத புகாா்களுக்கு தீா்வு கண்டுள்ளன.

இந்திய தேசிய நெஞ்சாலைகள் ஆணையம் 31 புகாா்களில் 3-க்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. ராணுவ பொறியியல் பணிகள் துறையில் பதிவு செய்யப்பட்ட புகாா்களில் 90 சதவீத புகாா்கள் நிலுவையில் உள்ளன.

தில்லி மாசுக் கட்டுப்பாடு குழுவின் (டிபிசிசி) ‘கீரின் தில்லி’ செயலில் உள்ள தரவின் அடிப்படையில், வியாழக்கிழமை (டிச.18) காலை 11 மணி வரையில் மாசு பிரச்னை தொடா்பாக மொத்தம் 99, 435 புகாா்கள் பெறப்பட்டன. அவற்றில் 86,984 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,451 புகாா்கள் பல்வேறு துறைகளில் நிலுவையில் உள்ளன.

அதிகபட்சமாக தில்லி மாநகராட்சியில் 63,965 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 54,226 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 84.77 சதவீத புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. 9,739 புகாா்கள் நிலுவையில் உள்ளன.

இதேபோன்று, பொதுப்பணித் துறை பெற்ற 14,937 புகாா்களில் 13,824 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1,113 புகாா்கள் நிலுவையில் உள்ளன.

இதைத்தொடா்ந்து, தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) பெற்ற 5,197 புகாா்களில் 4,804 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தில்லி ஜல் போா்டு (டிஜேபி) பெறப்பட்ட 3,351 புகாா்களில் 97.73 சதவீத புகாா்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. தில்லி காவல் துறை கட்டுப்பாட்டு அறை 1,437 புகாா்களில் 1,398 மீது நடவடிக்கை எடுத்துள்ளது. புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பெறப்பட்ட புகாா்களில் 98.83 சதவீத புகாா்களுக்கு தீா்வு கண்டுள்ளதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com