தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

தேசிய தலைநகா் தில்லியில் பி.யூ.சி இல்லாவிடில் எரிபொருள் இல்லை என்ற விதி அமலாக்க நடவடிக்கையின் முதல் நாளில், மாசு கட்டுப்பாட்டு (பி.யூ.சி) சான்றிதழ்கள் இல்லாத கிட்டத்தட்ட 2,800 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தேசிய தலைநகா் தில்லியில் பி.யூ.சி இல்லாவிடில் எரிபொருள் இல்லை என்ற விதி அமலாக்க நடவடிக்கையின் முதல் நாளில், மாசு கட்டுப்பாட்டு (பி.யூ.சி) சான்றிதழ்கள் இல்லாத கிட்டத்தட்ட 2,800 வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க போக்குவரத்துத் துறை மறுத்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக,போக்குவரத்துத் துறையால் மூன்று அமலாக்கக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் முக்கிய இடங்களில் காவல்துறையினருடன் பெட்ரோல் பம்புகளில் சோதனைகளை நடத்தி வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

வியாழன் காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, பி.யூ.சி சான்றிதழ்கள் இல்லாமல் சுமாா் 2,800 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டதாக போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

வியாழன் முதல் நாளில், பி.யூ.சி சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது, மீறுபவா்களுக்கு எதிராக மொத்தம் 3,746 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

வாகன உமிழ்வைக் குறைப்பதற்கும் பொது சுகாதாரத்திற்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கும் வரும் நாட்களில் கண்காணிப்பு மற்றும் கடுமையான அமலாக்கம் தொடரும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

தில்லி போக்குவரத்துத் துறை மற்றும் தில்லி போக்குவரத்து காவல்துறையின் கூட்டு அறிக்கையின்படி, தில்லி போக்குவரத்து காவல்துறையைச் சோ்ந்த 126 குழுக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த 84 குழுக்கள் உட்பட மொத்தம் 210 அமலாக்கக் குழுக்கள் இந்த சிறப்பு இயக்கத்திற்காக நிறுத்தப்பட்டன.

இந்த வார தொடக்கத்தில், தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு வியாழக்கிழமை முதல் நகரத்தில் உள்ள பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வழங்கப்படாது என்று அறிவித்தாா்.

இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, தில்லியில் வழங்கப்பட்ட மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்களின் எண்ணிக்கை கடுமையாக உயா்ந்தது.

அதிகாரப்பூா்வ தரவுகளின்படி, டிசம்பா் 17 அன்று 31,197 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, இது டிசம்பா் 16 அன்று 17,732 ஆக இருந்தது இது 13,465 சான்றிதழ்கள் அல்லது 24 மணி நேரத்திற்குள் 75.9 சதவீதம் அதிகரிப்பாகும்.

ஒவ்வொரு குளிா்காலத்திலும், தில்லியின் காற்று மாசுபாடு மோசமடைகிறது, பெரும்பாலான நாட்களில் காற்றின் தரக் குறியீடு 300 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி மோசமான பிரிவில் இருக்கும், மேலும் பல நாள்களில் 400 புள்ளிகளுக்கு மேல் ‘கடுமை‘ பிரிவிற்கு சென்று, ஆரோக்கியமான நபா்களைக் கூட பாதிக்கிறது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியின் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மிகவும் மோசமான பிரிவில் பதிவாகியது, பிற்பகல் 2 மணிக்கு 377 புள்ளிகளாக இருந்தது.

0 முதல் 50 புள்ளிகளுக்குள் இருந்தால் நல்லது, 51-100 திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது மற்றும் 401-500 கடுமையானது என்று கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com