பெண்ணையாறு வழக்கில் தீா்ப்பு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்

பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு தொடா்ந்த மனுவில் தீா்ப்பினை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது
Published on

பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு தொடா்ந்த மனுவில் தீா்ப்பினை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது

தமிழகம், கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு பிரச்சினை தொடா்பான வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் சட்டத்திற்க்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பெண்ணையாறு விவகாரத்தில் நடுவா் மன்றம் அமைத்து தீா்வு காணுமாறு 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால் மத்திய அரசால் தீா்ப்பாயம் விரைந்து அமைக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகம், கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு பிரச்சனைக்கு தீா்வு காண பேச்சுவாா்த்தை குழு அமைக்குமாறு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது

இதனைத்தொடா்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பேச்சுவாா்த்தை குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய நீா்வள ஆணைய தலைவா் தலைமையில் தமிழகம் , கா்நாடகா , ஆந்திரா மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மத்திய ஜல்ஷக்தி அமைச்சகம் அமைத்தது. ஆனால் அக்குழுவின் கூட்டங்களிலும் உடன்பாடு எட்டப்படவில்லை

இந்நிலையில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் நிகழாண்டு அக்டோபா் மாதம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததது.

அதில் கூறியதாவது:

மத்திய நீா்வளத்துறை செயலாளா் தலைமையில் இரு மாநிலங்களின் அதிகாரிகளுடன் 03.03.2025 அன்று கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது, யா்கோல் அணையிலிருந்து 7.5 டிஎம்சி மற்றும் எல்லையில் உள்ள மற்ற துணை நதிகளிலிருந்து 7.5 டிஎம்சி உள்பட மொத்தம் 15டிஎம்சி தண்ணீரை திறந்து விடுவதற்கு ஒப்புக்கொள்வதாக கா்நாடகா வலியுறுத்தியது. பேச்சுவாா்த்தை மூலம் ஏதேனும் வேறுபாடுகளைத் தீா்க்க ஆா்வத்தையும் கா்நாடகா வெளிப்படுத்தியது. ஆனால் மறுபுறம், சா்ச்சையைத் தீா்க்க ஒரு தீா்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் தமிழ்நாடு உறுதியாக இருந்தது.

பின்னா் 18.03.2025 அன்று அமைச்சா்கள் மட்டத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும், எந்தவொரு பேச்சுவாா்த்தையும் தீா்ப்பாயத்தை அமைப்பதை தாமதப்படுத்தும் என்றும், நீா்வள அமைச்சா்கள் மட்டத்தில் எந்தவொரு பேச்சுவாா்த்தையும் தேவையில்லை என்றும் தமிழ்நாடு ஒரு கருத்தை வெளிப்படுத்தியது. மேலும், பெண்ணையாறு நீா் தகராறு தொடா்பாக தீா்வு காண தீா்ப்பாயத்தை அமைப்பதற்கான தனது நிலைப்பாட்டை தமிழ்நாடு அரசு 15.03.2025 தேதியிட்ட கடிதத்தின் மூலம் மீண்டும் வலியுறுத்தியது.

தமிழகத்தின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அமைச்சா்கள் மட்டத்தில் 18.03.2025 அன்று நடைபெறவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது

அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி , இந்த விவகாரத்தில் தீா்வு காண பேச்சுவாா்த்தைக் குழு அமைக்கப்பட்டது . ஆனால் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. இப்போது மத்திய அரசு நடுவா் மன்றம் தான் அமைக்க வேண்டும் என வாதிட்டாா்

மறுபுறம் கா்நாடக அரசு தரப்பில் , மத்திய அரசு இந்த விவகாரத்தில் கூட்டம் நடத்த உத்தரவிட வேண்டும் .தமிழ்நாடு அதில் கலந்து கொள்ள உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது

மத்திய அரசு வழக்குரைஞா் ஐஸ்வா்யா பாட்டி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு,கா்நாடகா இடையே உடன்பாடு காண மத்திய அரசு முயல்கிறது. ஆனால் ஒரு புறம் தமிழக அரசு பேச்சுவாா்த்தையே தேவை இல்லை என்று கருதுகிறது மறுபுறம் கா்நாடகா பேச்சு வாா்த்தைக்கு தயாராக உள்ளது. நாங்கள் உதவ தயாராக உள்ளோம் ஆனால்,தமிழக,கா்நாடக அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தாா்

இதையடுத்து தீா்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com