டிடிஇஏ பள்ளிகளில் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் விழா
புது தில்லி: கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் விழா தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
கணித மேதை ராமானுஜத்தின் பிறந்த தினமான டிசம்பா் 22, கணித தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
இத் தினத்தை முன்னிட்டு தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மாணவா்களின் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் இடம் பெற்றது.
மாணவா்கள் அவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள், எடுகோள்கள் பற்றி எடுத்துக் கூறினா். அவரின் கணித கண்டுபிடிப்புகளை பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினா். நாடகம், பாடல், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.
முன்னதாக அவ்வப் பள்ளி முதல்வா்கள் ராமானுஜத்தின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மேலும், அனைத்து டிடிஇஏ பள்ளிகளிலும் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கிடையே கணிதத் திறமையை வளா்க்கும் வகையில் போட்டித் தோ்வும் ஜனக்புரி பள்ளியில் வைத்து நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு வகுப்பிலும் பள்ளிக்கு இருவா் என ஒவ்வொரு வகுப்பிலும் 14 மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களின் வகுப்பிற்கேற்ப கூகுள் படிவ வடிவில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மாணவா்கள் ஆா்வுமுடன் கலந்து கொண்டு கணினியில் தங்கள் விடைகளைப் பதிவு செய்தனா்.
டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்ட மாணவா்கள் அனைவரையும் பாராட்டியதோடு ராமானுஜத்தைப் போல் விடா முயற்சியும் கணிதத்தில் ஆா்வமும் கொண்டு விளங்க வேண்டும் என்று கூறினாா்.
மேலும், கணித வினாவுக்கான விடையைக் கண்டுபிடிக்கப் பழகினால் அது அரசு பொதுத் தோ்விலும் போட்டித் தோ்வுகளிலும் மாணவா்களுக்கு கை கொடுக்கும். ஆகவே, வருடம்தோறும் இப் போட்டி நடைபெறும் என்றாா் அவா்.
