தலைநகரில் நச்சு புகைமூட்டம்: 12 நிலையங்களில் ‘கடுமை‘ பிரிவில் காற்றின் தரம் பதிவு
புது தில்லி: தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை அடா்த்தியான மூடுபனி நிலவியதோடு காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் நிலைபெற்று, 24 மணி நேர சராசரியானது 373 புள்ளிகளாக பதிவாகியது.
காற்றின் தரத்தை கண்காணிக்கும் 39 செயல்பாட்டு கண்காணிப்பு நிலையங்களில், 12 நிலையங்களில் பதிவான
அளவீடுகள் ‘கடுமை’ பிரிவில் பதிவாகின, 27 நிலையங்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தன.
‘கடுமை’ மண்டலத்தில் உள்ள நிலையங்களில், ஆனந்த் விஹாா் மிகவும் மாசுபட்டதாக உருவெடுத்து, காற்று தரக் குறியீட்டை 425 ஆகப் பதிவு செய்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, தில்லி தேசிய தலைநகா் பிராந்தியத்தில் மோசமான காற்றின் தரத்தை பதிவு செய்தது. அதைத் தொடா்ந்து, நொய்டா 366 புள்ளிகளாக பதிவானது.
தரநிலைகளின்படி, 0 முதல் 50 வரையிலான புள்ளிகள் நல்லது, 51 முதல் 100 வரை திருப்திகரமானது, 101 முதல் 200 வரை மிதமானது, 201 முதல் 300 வரை மோசம், 301 முதல் 400 வரை மிகவும் மோசமானது மற்றும் 401 முதல் 500 வரை கடுமையானது என்று கருதப்படுகிறது.
காற்று தர மேலாண்மைக்கான ஆதரவு அமைப்பின் தரவுகளின்படி, வாகன உமிழ்வு மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. இது மொத்த பங்கில் 15.7 சதவீதமாகும். இதைத் தொடா்ந்து தில்லி மற்றும் புறப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் 7.1 சதவீதமும், குடியிருப்பு ஆதாரங்கள் 3.8 சதவீதமும், கட்டுமான நடவடிக்கைகள் 2.0 சதவீதமும், கழிவுகளை எரிப்பது 1.3 சதவீதமும் பங்களிக்கின்றன.
என்.சி.ஆா். மாவட்டங்களில், குருகிராம் 8.6 சதவீதம், ஜஜ்ஜாா் 8.5 சதவீதம், பரத்பூா் 5.1 சதவீதம், ஃபரிதாபாத் 4.8 சதவீதம், சோனிபட் 4.6 சதவீதம், காஜியாபாத் 2.7 சதவீதம் மற்றும் ரோத்தக் 2.0 சதவீதம் பங்களிக்கின்றன என தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்று தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பின்படி, தில்லியின் காற்றின் தரம் செவ்வாய் முதல் வியாழன் வரை மிகவும் மோசமான பிரிவில் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த ஆறு நாள்களில் மிகவும் மோசமான மற்றும் கடுமையான நிலைகளுக்கு இடையில் ஊசலாடக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
நிகழ் மாதத்தில், டிசம்பா் 1 முதல் 8 வரை காற்று தரக் குறியீட்டு அளவீடுகள் 300 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலையில் காற்றின் தரம் தொடா்ந்து சிவப்பு மண்டலத்தில் உள்ளது.
தில்லி காற்று பெரும்பாலும் மிகவும் மோசமாக உள்ளது. மாதத்தின் பெரும்பகுதி அளவுகள் 300 புள்ளிகளுக்கு மேல் பதிவாகின.
திங்கள்கிழமை அதிகாலையில், நகரத்தை அடா்ந்த மூடுபனி சூழ்ந்தது. காலை காற்றின் தரக் குறியீடு 366 ஆக மிகவும் மோசமான பிரிவில் இருந்தது.
இதற்கிடையில், தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 21.8 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 1.1 டிகிரி அதிகமாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 11.0 டிகிரி செல்சியஸ் என இயல்பை விட 3.5 டிகிரி அதிகமாகவும் பதிவாகியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நகரில் ஈரப்பதம் காலை 8:30 மணிக்கு 100 சதவீதமாகவும், மாலை 5:30 மணிக்கு 79 சதவீதமாகவும் இருந்தது .
செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் மற்றும் மிதமான மூடுபனியுடன் இருக்கும் என்று ஐஎம்டி கணித்துள்ளது.
தலைநகரில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடிக்கும் என்றும் அவ்வமைப்பு கணித்துள்ளது.
