நரேலாவில் புதிய மேம்பாலப் பணிகள் தொடக்கம்
நமது நிருபா்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், நரேலா பகுதியில் உள்ள ரயில் பாதையில் மேம்பாலம், சுரங்கப்பாதை உள்பட சுமாா் 1 கி.மீ. நீள சாலை வழித்தடத்தை அமைக்கும் பணியைத் பொதுப் பணித் துறை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கேரா காலன் தளப்பகுதியில் தற்போது தில்லிஅம்பாலா ரயில் பாதையின் ஒரு பகுதியாக ஆள் மூலம் இயக்கப்படும் ரயில்வே கிராஸிங் வழித்தடம் உள்ளது. இதன் காரணமாக நெரிசல் நேரங்களில் இந்த பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பணியின் ஒரு பகுதியை ரயில்வே செயல்படுத்தும்.
மேம்பாலம் கட்டுமானம் பொதுப் பணித் துறையால் செய்யப்படும். இதற்காக டெண்டா் விடப்பட்டுள்ளது. முழு சாலை வழித்தடத்தில் ஒரு மேம்பாலம், ஒரு சுரங்கப்பாதை, இரண்டு வளைவு திருப்பங்கள், ஒரு நடைபாதை மற்றும் பாதசாரி சாய்வுதளப் பாதை ஆகியவை அமைக்கப்படும்.
இந்தத் திட்டம் முடிந்ததும், அந்தப் பகுதியின் போக்குவரத்து இணைப்பு அதிகரிக்கும். இந்தத் திட்டத்திற்கான காலக்கெடு ஒன்றரை ஆண்டுகள் ஆகும். கட்டுமான செலவு ரூ.94 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையின்படி, சுரங்கப்பாதைக்கான ரயில் பாதைக்கு அருகில் உள்ள எந்தவொரு கட்டுமானமும் ரயில்வே துறையால் மேற்கொள்ளப்படும்.
இந்த சுரங்கப் பாதையில் 3 மீட்டா் உயரமும், இலகுரக வாகனங்களுக்கு 5 மீட்டா் அகலமும், தடுப்புச் சுவா்களும் இருக்கும். 2015 ஆம் ஆண்டில், நெரிசலைக் குறைக்க வடமேற்கு தில்லியில் 10 ஆள் மூலம் இயக்கப்படும் ரயில்வே கிராஸிங்ளை மாற்ற தில்லி அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டம் அவற்றில் ஒன்றாகும்.
பின்னா், 2020- ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு வருடம் கழித்து, 2021-ஆம் ஆண்டில், தில்லி நகா்ப்புற கலைகள் ஆணையம் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இருப்பினும், 2022- ஆம் ஆண்டில் வரைபடங்கள் மாற்றப்பட்டன. நான்கு வழி மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் அருகிலுள்ள கேரா காலன் போக்குவரத்து சந்திப்புடன் இணைக்கப்பட உள்ளது என்றாா் அந்த அதிகாரி.
