காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கை: 28 பேருந்துகள் பறிமுதல்
தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டத்தின் (கிரேப்) கீழ் மாசு தடுப்பு அமலாக்க நடவடிக்கையை தில்லி போக்குவரத்துத் துறை வெள்ளிக்கிழமை தீவிரப்படுத்தியது.
இதன்படி, உமிழ்வு விதிமுறைகளை மீறியதற்காக ஒரே நாளில் மாநிலங்களுக்கு இடையேயான வாகனங்கள் உள்பட 28 பேருந்துகளை பறிமுதல் செய்ததாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 4,927 வாகனங்களை ஆய்வு செய்த அமலாக்க அதிகாரிகள், 3,970 வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளனா். இவற்றில், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (பி. யு. சி. சி.)
விதிமீறல்களுக்காக தில்லி போக்குவரத்து காவல்துறையால் 2,390 அபராதங்களும், போக்குவரத்து அமலாக்க குழுக்களால் 285 அபராதங்களும், தானியங்கி எண் தகடு அங்கீகார கேமராக்கள் மூலம் 1,114 அபராதங்களும் விதிக்கப்பட்டன.
போக்குவரத்துத் துறையால் கிரேப் விதிமீறல்களுக்காக 11 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் போக்குவரத்து காவல்துறை 170 கிரேப் தொடா்பான அபராதங்களை வழங்கியது.
இணக்கத்திற்குப் பிறகு 238 வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. கஷ்மீரி கேட், கீதா காலனி மற்றும் மோரி கேட் உள்ளிட்ட முக்கிய நெரிசல் இடங்களிலும், நகரின் நுழைவு இடங்களிலும் அமலாக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், மாசு தொடா்பான மீறல்களுக்காக இந்த மாதம் இதுவரை சுமாா் 100 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாசு கட்டுப்பாட்டு மையங்களில் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்த போக்குவரத்துத் துறை, இதுவரை 28 மையங்களின் உரிமத்தை தாற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இரண்டின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறைகேடு செய்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கில், போலி சான்றிதழ்களை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட பி. யு. சி. மையத்திற்கு எதிராக கோகுல்புரி காவல் நிலையத்தில் போலீஸ் புகாா் பதிவு செய்யப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறியதாவது:
மாசுபடுத்தும் வாகனங்களுக்கு எதிராக கடுமையான அமலாக்கம் தொடரும். அதே நேரத்தில் பி. யு. சி. மையங்களில் குடிமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யப்படும். தில்லி முழுவதும் உள்ள பி. யு. சி. மையங்களை நேரில் ஆய்வு செய்து ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் நேரடியாக என்னிடம் புகாா் செய்யுமாறு போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளா்கள் பி. யு. சி. மையங்களில் எந்த சிரமத்தையும் எதிா்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில் மாசு விதிமுறைகளை நாங்கள் உறுதியாக அமல்படுத்துகிறோம்.
இந்த மையங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தில்லிக்கு தூய்மையான காற்று மற்றும் குடிமக்களுக்கான வெளிப்படையான, தொந்தரவு இல்லாத சேவைகள் எங்கள் முன்னுரிமைகளாக உள்ளன என்றாா் அமைச்சா்.
