காற்று சுத்திகரிப்பான்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடியாதது ஏன்? தில்லி உயா்நீதிமன்றம் கேள்வி
தேசிய தலைநகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, காற்று சுத்திகரிப்பு சாதனங்களை சாமானிய மக்களும் வாங்கும் வகையில், அதன் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) ஏன் குறைக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.
காற்று சுத்திகரிப்பு சாதனங்களை ‘மருத்துவ சாதனங்கள்’ என வகைப்படுத்தவும், அதன் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கவும் உத்தரவிடக் கோரிய பொதுநல வழக்கின் விசாரணையின் போது உயா்நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியது.
வழக்குரைஞா் கபில் மதன் தாக்கல் செய்த இந்த மனுவில், கடுமையான மாசுபாட்டால் தில்லியில் ஏற்பட்டுள்ள அவசர நிலையின்போதும், காற்று சுத்திகரிப்பு சாதனங்களை ஆடம்பரப் பொருள்களாக கருத முடியாது என்று வாதிடப்பட்டது.
நீதிபதிகள் விகாஸ் மகஜன் மற்றும் வினோத் குமாா் அடங்கிய விடுமுறைக் கால அமா்வு இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை விலை கொண்ட காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் சாதாரண குடிமக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
‘சாமானிய மனிதனின் வாங்கும் சக்திக்கு ஏற்ற ஒரு நியாயமான நிலைக்கு ஏன் விலையைக் குறைக்கக்கூடாது?’ என்று நீதிபதிகள் அமா்வு கருத்துத் தெரிவித்ததுடன், வரிச்சுமையைக் குறைக்க மத்திய அரசு வழியைக் கண்டறிய வேண்டும் என்றும் கூறியது.
மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என். வெங்கடராமன், ஜிஎஸ்டி கவுன்சில் அரசமைப்பு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றும், வரி விகிதங்கள் குறித்த முடிவுகளுக்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒப்புதல் தேவை என்றும் தெரிவித்தாா்.
ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்கெடுப்பு நேரடியாகவே நடத்தப்பட வேண்டும், காணொளிக் காட்சி மூலம் நடத்த முடியாது என்றும், இது தொடா்பாக அரசு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்யும் என்றும் நீதிமன்றத்தில் அவா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 10 நாள்கள் அவகாசம் அளித்த நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, டிச.24-ஆம் தேதி, காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது அல்லது நீக்குவது குறித்துப் பரிசீலிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மிகவும் மோசமான காற்றின் தரத்தால் ஏற்பட்ட அவசர நிலை காலத்தில், வரிச் சலுகை வழங்காததற்காக அதிகாரிகளை நீதிமன்றம் இதற்கு முன்பு விமா்சித்திருந்தது.
மனுதாரா், மருந்து மற்றும் அழகுசாதனப் பொருள்கள் சட்டத்தின் கீழ் பிப்ரவரி 2020-இல் வெளியிடப்பட்ட அறிவிப்பையும் மேற்கோள் காட்டி, காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் மருத்துவ சாதனங்களாகத் தகுதி பெறுகின்றன என்றும், அவற்றுக்கு 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டாா்.

