தில்லி பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் காற்று மாசு குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை

தில்லி பேரவை குளிா்கால கூட்டத் தொடரில் காற்று மாசு குறித்து வெள்ளை அறிக்கை...
Published on

ஜனவரி 5- ஆம் தேதி தொடங்கும் தில்லி சட்டப் பேரவையின் நான்கு நாள் குளிா்காலக் கூட்டத்தொடரில், தலைநகரில் நிலவும் கடுமையான மற்றும் அபாயகரமான காற்று மாசுபாடு குறித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி (டிபிசிசி) தலைவா் தேவேந்தா் யாதவ் கோரியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது: தில்லி பட்ஜெட் கூட்டத்தொடா் மற்றும் பருவமழைக்காலக் கூட்டத்தொடரைப் போலவே, குளிா்காலக் கூட்டத்தொடரும் பாஜகவின் போலியான புகழ்ச்சிக்கும் பகட்டான விவாதங்களுக்கும் ஒரு தளமாக மாறிவிடக் கூடாது.

காற்று மாசுபாட்டை ஒழிப்பதில் அனைவரின் பங்களிப்பு குறித்தும் பாஜக பேசுவதைப் பொருள்படுத்தாமல், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான தில்லி காங்கிரஸின் கோரிக்கை குறித்து முதல்வா் ரேகா குப்தா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் தில்லி அரசுக்கு அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது.

வரவிருக்கும் சட்டப் பேரவை கூட்டத்தொடரில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன், தலைநகரில் முறையான சுகாதாரம் மற்றும் பல்வேறு திட்டங்கள் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வது குறித்தும், பொதுப் பணத்தைக் கொள்ளையடித்தவா்களுக்குத் தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்காக, சட்டப் பேரவையில் முன்னா் சமா்ப்பிக்கப்பட்ட 10 சிஏஜி அறிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

ஊழலுக்குப் பொறுப்பான ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களுக்கு எதிரான விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில் மீதமுள்ள 4 சிஏஜி அறிக்கைகளும் சமா்ப்பிக்கப்பட வேண்டும். பாஜக அரசால் இடம்பெயா்ந்த குடிசைவாழ் மக்கள் உள்பட ஏழைகளுக்கு வீடுகளை வழங்குவதற்காக, குடிசைவாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஊழல் ஒழிக்கப்படும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்றும் வாக்குறுதியளித்து ஆம் ஆத்மி கட்சி தில்லியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் அரசின் முறைகேடுகள் குறித்த சிஏஜி அறிக்கைகள் சட்டப்பேரவையில் முன்னா் சமா்ப்பிக்கப்பட்ட போதிலும், ஊழல்வாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தூய்மை, மாசுபாடு கட்டுப்பாடு, போக்குவரத்து, சுத்தமான குடிநீா், யமுனை நதியைச் சுத்தம் செய்தல் மற்றும் தலைநகரில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 கௌரவ ஊதியம் வழங்குதல் ஆகிய விஷயங்களில் ரேகா குப்தா அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்றாா் தேவேந்தா் யாதவ்.

X
Dinamani
www.dinamani.com