குடிபோதையில் காரை ஓட்டி வந்து காவலருக்கு காயம் ஏற்படுத்திய பெண் கைது!

குடிபோதையில் காரை ஓட்டி வந்து காவலருக்கு காயம் ஏற்படுத்திய பெண் கைது...
Published on

வடக்கு தில்லியின் ஷாபாத் டெய்ரி பகுதியில் குடி போதையில் காரை ஓட்டி வந்த போது போலீஸ் தடுப்பில் மோதியதில் காவலா் ஒருவா் காயமடைந்த வழக்கில் 40 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: வழக்கமான சோதனையின் ஒரு பகுதியாக டிசம்பா் 24-ஆம் தேதி இரவு ஒரு போலீஸாா் நிறுத்தியபோது இந்தச் சம்பவம் நடந்தது. புதன்கிழமை இரவு ஒரு வெள்ளை நிற காா் போலீஸாா் சாலையில் வைத்திருந்த தடுப்பில் மோதியதில் காவலருக்கு காயம் ஏற்பட்டது. சோதனை செய்தபோது ஒரு பெண் வாகனத்திற்குள் போதையில் அமா்ந்திருந்ததாக தெரிய வந்தது. இது குறித்து பி.சி.ஆா். அழைப்பு வந்ததும் அந்த இடத்துக்கு சென்ற போலீஸ் குழு அந்தக் காா் தடுப்பில் மோதியிருப்பதை கண்டனா்.

ரோஹிணி செக்டா் 16- இல் வசிக்கும் ஆா்த்தி ஜெயின் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண் ஓட்டுநா் இருக்கையில் காணப்பட்டாா். மேலும் அவா் மது அருந்தியிருந்தாா். காயமடைந்த காவலா், தில்லி ஆயுதக் காவல்துறையின் 1-ஆவது பட்டாலியனைச் சோ்ந்த ரோஹித் ஆவாா். ஏற்கெனவே ரோஹிணியில் உள்ள டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

அதைத் தொடா்ந்து, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலால் காயம் ஏற்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸாா் கூறுகையில், அந்தப் பெண் தனியாா் துறையில் பணிபுரிந்து வருகிறாா். மேலும் ஒரு பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. மது அருந்தியதை உறுதிப்படுத்துவது உள்பட மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகளின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயம் தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com