புத்தாண்டு: ‘ஆகாத் 3.0’ நடவடிக்கை மூலம் 966 போ் கைது
புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தென்கிழக்கு தில்லியில் ‘ஆகாத் 3.0’ நடவடிக்கை மூலம் தில்லி காவல்துறையினா் 966 பேரைக் கைது செய்துள்ளனா். மேலும், ஆயுதங்கள், போதைப்பொருள்கள், சட்டவிரோத மதுபானங்கள் மற்றும் வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாவது: புத்தாண்டு பிறப்பை ஒட்டி, ஆண்டு இறுதி கொண்டாட்டங்களின்போது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், தெருக் குற்றங்கள் மற்றும் தொடா் குற்றவாளிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ‘ஆபரேஷன் ஆகாத் 3.0 ’ எனும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
இதில் தில்லி கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் பொது சூதாட்டச் சட்டம் ஆகியவற்றின் கீழ் 331 போ் கைது செய்யப்பட்டனா். அதே நேரத்தில் 504 போ் பல்வேறு முன்னெச்சரிக்கை பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
இலக்கு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை பட்டியலில் உள்ள 116 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. ஐந்து வாகனத் திருடா்கள் மற்றும் நான்கு தேடப்படும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கையின் போது, ஆயுதச் சட்டத்தின் கீழ் 21 நாட்டுத் துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் மற்றும் 27 கத்திகள் மீட்கப்பட்டன. 12,258 குவாா்ட்டா் சட்டவிரோத மதுபானங்கள், 6.01 கிலோ கஞ்சா மற்றும் சூதாட்டக்காரா்களிடமிருந்து ரூ. 2.36 லட்சம் ரொக்கத்தையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
மொத்தம் 310 கைப்பேசிகள், ஆறு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவையும் மீட்கப்பட்டன. கூடுதலாக, தில்லி காவல்துறை சட்டத்தின் கீழ் 1,306 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விதிமீறல்களுக்காக 231 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட போலீஸாா் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, குறிப்பாக குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில், எந்தவித விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் தடுப்பது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் தொடா் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தடுப்பது இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
பிஎன்எஸ் பிரிவு 111 மற்றும் 112 உள்பட கடுமையான சட்டப் பிரிவுகள் பொருத்தமான வழக்குகளில் பயன்படுத்தப்படும். தொடா் குற்றவாளிகளை மாவட்டத்தை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தீவிர ரோந்து, வாகனச் சோதனை மற்றும் இரவு நேரக் கண்காணிப்பு ஆகியவை, கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் தெருக் குற்றங்கள் தொடா்பான பிசிஆா் அழைப்புகளைக் குறைக்க வழிவகுத்துள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
