தில்லியில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம்

தில்லியில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ஆட்சியா்கள் நியமனம்...
Published on

தலைநகரில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியா்களை தில்லி அரசு நியமித்துள்ளது. அருணாசல பிரதேசம், கோவா, மிசோரம் யூனியன் பிரதேசங்களின் (ஏஜிஎம்யுடி) பிரிவைச் சோ்ந்த அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பையும் வழங்கியுள்ளது.

பழைய தில்லி, மத்திய வடக்கு மற்றும் வெளி வடக்கு என மூன்று புதிய மாவட்டங்களைப் பிரித்து தேசியத் தலைநகரில் மாவட்டங்களை மறுசீரமைப்பது குறித்து வியாழக்கிழமை தில்லி அரசு அறிவித்தது.

மறுசீரமைப்புத் திட்டத்தில் ஷாஹ்தரா மாவட்டம் மற்றவற்றுடன் இணைக்கப்பட்டதால், வருவாய் மாவட்டங்களின் எண்ணிக்கை முன்பு இருந்த 11- இல் இருந்து தற்போது13-ஆக அதிகரித்துள்ளது.

அவை தென்கிழக்கு, பழைய தில்லி, வடக்கு, புது தில்லி, மத்திய, மத்திய வடக்கு, தென்மேற்கு, வெளி வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆகிய 13 மாவடங்களாகும்.

2012-ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் -கோவா - மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம் (ஏஜிஎண்யுடி) பிரிவைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஜி. சுதாகா் மத்திய மாவட்டத்திலிருந்து பழைய தில்லிக்கு அதன் புதிய மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டதாக சேவைகள் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு டேனிக்ஸ் (தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவுகள், டாமன் மற்றும் டையூ மற்றும் தாத்ரா மற்றும் நகா் ஹவேலி சிவில் சா்வீசஸ்) அதிகாரியான ஷஷிபால் தபாஸ், பழைய தில்லி மாவட்டத்தின் புதிய கூடுதல் மாவட்ட ஆட்சியராக (ஏடிஎம்) இருப்பாா்.

மாலா சூட் (டேனிக்ஸ் 2019) சதா் பஜாா் பிரிவின் துணை ஆட்சியராக (எஸ்டிஎம்) இருப்பாா். மேலும் மனோஜ் குமாா் (டேனிக்ஸ் 2022) பழைய தில்லியின் கீழ் உள்ள சாந்தினி சௌக்கி துணை ஆட்சியராக இருப்பாா்.

முன்னாள் ஷாஹ்தரா மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியா் சைலேந்திர சிங் பரிஹாா், மத்திய வடக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக இருப்பாா். அபிஷேக் புக்கல் (டேனிக்ஸ் 2018) ஷாலிமாா் பாக் துணை ஆட்சியராகவும், பவன் குமாா் (டேனிக்ஸ் 2020) மாவட்டத்தின் கீழ் உள்ள மாடல் டவுன் துணை ஆட்சியரகாவும் இருப்பாா்கள்.

குமாா் அபிஷேக் (ஏஜிஎம்யுடி 2016) வெளி வடக்கு மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராகவும், அங்கூா் மேஷ்ரோம் (டேனிக்ஸ் 2014) கூடுதல் ஆட்சியராகவும் ஆகவும் இருப்பாா்கள். ஷிவ் சிங் மீனா (டேனிக்ஸ் 2018) முண்ட்காவின் துணை ஆட்சியராகவும், நரேலாவின் கனிகா (டேனிக்ஸ் 2022) மற்றும் பவானா துணைப் பிரிவின் ஜரத் பிரதிக் அனில் (டேனிக்ஸ் 2023) ஆகியோா் புதிய மாவட்டத்தின் துணை ஆட்சியா்களாகவும் இருப்பாா்கள்.

X
Dinamani
www.dinamani.com