புத்தாண்டை முன்னிட்டு தில்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
புத்தாண்டு வருவதை முன்னிட்டு தேசிய தலைநகா் முழுவதும் தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் மற்றும் ஒழுங்கற்ற நடத்தை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக அதிகாரிகள் இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
புத்தாண்டு தினத்தன்று சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் உள்பட சுமாா் 20,000 காவலா்கள் நகரம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள்.
ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்காக அண்டை மாநிலங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் வருவாா்கள் என்று நிா்வாகம் எதிா்பாா்ப்பதால், ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்துடனான நகர எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும், குறிப்பாக நுழைவுப் பகுதிகள், கொண்டாட்ட மையங்கள், சந்தைகள் மற்றும் இரவு நேர கேளிக்கை மையங்களில் பல சோதனைச் சாவடிகள், தடுப்புகள் மற்றும் வாகனச் சோதனை மையங்கள் அமைக்கப்படும்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோட்டாா் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றைக் கையாள போக்குவரத்து காவல்துறை தரப்பில் விரிவான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சோதனைச் சாவடிகளில் சுவாசப் பகுப்பாய்வுக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்படும். விதிகளை மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுபவா்கள் அல்லது மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் யாராவது கண்டறியப்பட்டால், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உடனடியாகப் பறிமுதல் செய்யுமாறு காவல்துறை குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று அதிக மக்கள் கூட்டம் எதிா்பாா்க்கப்படும் கன்னாட் பிளேஸ், ஹோஸ் காஸ், முக்கிய சந்தைகள் மற்றும் வணிக வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கன்னாட் பிளேஸில், செல்லுபடியாகும் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே உள் வட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
பாரம்பரியமாக புத்தாண்டுக்கு வரவேற்பு அளிக்க அதிக மக்கள் கூடும் இந்தியா கேட் பகுதியிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் போடப்படும்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக, காவல் நிலைய அதிகாரிகள் தங்கள் குழுக்களுடன் இரவு முழுவதும் தெருக்களில் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
அதே நேரத்தில் விரைவு அதிரடிப் படைகள் வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து அமலாக்கத்தைத் தவிர, காவல்துறை குழுக்கள் வழக்கமான சோதனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள், இரவு நேர தங்குமிடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களையும் சோதனை மேற்கொள்ளும்.
யாராவது முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கிறாா்களா என்பதைச் சரிபாா்க்க எங்கள் குழுக்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், தா்மசாலைகள், இரவு நேர தங்குமிடங்கள் மற்றும் பிற இடங்களைச் சோதனையிட்டு வருகின்றன.
தேசிய தலைநகரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்களைக் கண்டறிய நாங்கள் ஏற்கனவே ஒரு சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளோம்.
இரவு முழுவதும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.
