வடகிழக்கு தில்லி: வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு; இளைஞா் காயம்

வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு...
Published on

வடகிழக்கு தில்லியின் கரவால் நகரில் வாகனம் நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட மோதலின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஓா் இளைஞா் காயமடைந்ததாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கரவால் நகரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து உள்ளூா் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அங்கு பிரின்ஸ் (19) என்ற இளைஞா் துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் தரையில் கிடப்பதைக் கண்ட போலீஸாா், அவரை மீட்டு குரு தேஜ் பகுதூா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தன். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது.

வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பின்னா் மோதலாக மாறியதைத் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது முதல்கட்ட தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் தொடா்புடைய நபா்களைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

X
Dinamani
www.dinamani.com