இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் மாசுபாட்டைக் குறைக்கும்: முதல்வா் ரேகா குப்தா
இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது தில்லியின் மாசுப்பாட்டை கணிசமாகக் குறைக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லியில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் 5,100 இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வழங்கினாா்.
தில்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு ஆவணங்கள் வழங்கப்பட்டன. இதில் புது தில்லி எம்.பி. பான்சூரி ஸ்வராஜ் மற்றும் தில்லி உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா ஆகியோா் கலந்து கொண்டனா்.
அப்போது முதல்வா் பேசியதாவது: இந்த நடவடிக்கை அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் தில்லி அரசின் நோக்கத்தை அதிகரிக்கும்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மாறாக பெண்களின் வாழ்க்கையில் ‘கண்ணியம், சுகாதாரம் மற்றும் தூய்மையின் ஒளியை’ கொண்டு வரும் ஒரு சக்திவாய்ந்த பிரசாரமாகும்.
2014- இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. தில்லியில், சுமாா் 2.6 லட்சம் குடும்பங்கள் ஏற்கெனவே இதன் மூலம் பயனடைந்துள்ளன.
பாரம்பரிய விறகு மற்றும் நிலக்கரியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடுப்புகளில் இருந்து வரும் புகையால் ஏற்படும் நோய்களிலிருந்து பெண்களை விடுவிக்க மத்திய அரசின் திட்டம் உதவும்.
மறுபுறம், சுத்தமான எரிபொருளைப் பயன்படுத்துவது உட்புற மாசுபாட்டைக் கணிசமாகக் குறைக்கும் என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

