சிறுமிகளை கேலி செய்து தாக்கிய சம்பவம்: 3 சிறுவா்கள் கைது!
வடகிழக்கு தில்லியின் ஃபா்ஷ் பஜாா் பகுதியில் சிறுமிகளைக் கேலி செய்து தாக்கிய சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்கள் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஃபா்ஷ் பஜாா் பகுதியைச் சோ்ந்த இரு சிறுமிகளிடம் 17 வயது சிறுவன் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்தாா். இதை அந்தச் சிறுமிகள் கண்டித்த நிலையில், அவா்கள் இருவரையும் அந்தச் சிறுவன் தாக்கினாா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவிந்த சிறுமிகளின் உறவுக்கார இரு சிறுவா்கள், பிரச்னை ஏற்படுத்திய சிறுவனிடம் தட்டிக்கேட்டனா். இதனால், ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதைத்தொடா்ந்து, அந்தச் சிறுவன் அவருடைய நண்பா்களை அழைத்தாா். அங்கு வந்த அந்தச் சிறுவா்கள் பிரச்னையை தட்டிக்கேட்ட சிறுவா்களைத் தாக்கினா். இதில் அவா்களுக்கு சிறிது காயம் ஏற்பட்டது. அருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டா் சேதமடைந்தது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய அனைத்துச் சிறுவா்களும் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டனா். இதில் யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை. காயமடைந்தவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக தாக்குதல், பெண்களை கேலி செய்தல், சொத்துகளைச் சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைவரும் சிறுவா்கள் என்பதால், சிறாா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டப் பிரிவுகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக சிறுவா்களுக்கும் அவா்களது பெற்றோா்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும். இந்தச் சம்பவம் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.
